சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடியில் உள்ள உசிலங்குளம் கண்மாய் சிறுமழைக்கே உடைப்பு ஏற்பட்டது. விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. வாணியங்குடி பகுதியில் உள்ள உசிலங்குளம் கண்மாய் நிறைந்தது. மறுகால்பாயும் கலுங்கு பகுதியில் நீர் சேமிப்புக்காக விவசாயிகள் மணல் மூடைகளை கொண்டு அடுக்கி தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்ததால் கண்மாய் மேற்குப்புறத்தில் கரைகளை உடைத்து விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. தற்காலிகமாக தடுப்புகள் ஏற்படுத்தி தண்ணீரை கால்வாய்களுக்கு திருப்ப விவசாயிகள் முயற்சித்தனர்.அதிகாரிகள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் கரைகளுக்கு அருகே இருந்த மணலை அள்ளி உடைப்புகளை சீரமைத்தனர். கலுங்குபகுதியில் இருந்த அடைப்புகளை நீக்கினர். இருந்தும் அருகில் உள்ள நெல், வாழை பயிர்களின் வெள்ள நீர் புகுந்தது.கே.முத்துக்குமார் கூறியதாவது: உசிலங்குளம் கண்மாய் துார் வாரி பல ஆண்டுகளாகி விட்டது. கரைகள் பலமிழந்த நிலையில் உடைப்பு ஏற்பட்டது. பருவமழைக்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அடைத்ததால் கண்மாய் நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது, என்றார்.நாராயணன், விவசாயி தெரிவித்ததாவது: கண்மாய் உடைப்பு காரணமாக வெளியேறிய நீர் நெல், வாழை பயிர்களில் நிரம்பியுள்ளது. இதனை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. வரத்துக்கால்வாய் துார் வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதே நிலை நீடித்தால் பயிர்கள் அழுகி சேதம் ஏற்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE