சிங்கம்புணரி: மாவட்டத்தில் தோட்டப்பயிர்கள் அதிகம் விளையும் பகுதியாக எஸ்.புதுார் ஒன்றியம் உள்ள நிலையில் அங்கு காய்கறிகளை பதப்படுத்தி பாதுகாக்க வசதி இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு தோட்டப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. விளைந்த பயிர்களை பல்வேறு மாவட்ட வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கிச்சென்று வெளியூர் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.இங்கு கொள்முதலுக்கு வரும் வியாபாரிகள் பெரும்பாலும் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் ஆண்டு முழுவதும் உழைத்தும் உரிய விலை கிடைக்காமல் பல நேரங்களில் நஷ்டம் அடைகின்றனர்.காய்கறிகளை தேக்கி வைத்தால் அழுகி, மேலும் விலை குறைந்துவிடும் என்பதால் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே விற்று விடுகின்றனர். விளைபொருட்களை பாதுகாத்து வேறு ஒரு நாளில் விற்றால் நியாயமான விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், இப்பகுதியில் அதற்கான குளிர்பதன கிடங்கு இல்லை. இப்பகுதியில் அமைக்கப்படவேண்டிய குளிர்பதன கிடங்கு சிங்கம்புணரியில் அமைத்து, அதை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.சிங்கம்புணரி பகுதியை பொறுத்தவரை கிடங்கில் வைத்து பாதுகாக்கும் அளவிற்கு தோட்டப்பயிர்கள் சாகுபடி கிடையாது. கட்டிய கிடங்கு வீணாகக்கூடாது என்பதற்காக ஒப்புக்காக இக்கிடங்கை தனிநபருக்கு குறைந்த வாடகைக்கு விடுவதும், பிறகு மறுபடியும் ஆள் தேடுவதுமாக அதிகாரிகள் உள்ளனர். எனவே எஸ்.புதுார் ஒன்றிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் இது போன்ற கிடங்கை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE