தி.மு.க.,வினர் எனக்கு, 13வது பெயராக, 'ஆட்டு குழந்தை' எனக் கூறி வருகின்றனர். இதன் மூலம், ஆடு வளர்ப்பு விவசாயிகளை கேவலப்படுத்தியுள்ளனர். வரும் தேர்தலில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து, தி.மு.க., வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும். வரும் டிச., 5ல், தி.மு.க.,வை கட்டம் கட்டி, சூரம்சம்ஹாரம் செய்யப்படும்.
- மாநில, பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை
'அதென்ன, டிச., 5 என, நாட்டு மக்களுக்கு விளக்கினால் நன்றாக இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில, பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை பேச்சு.
அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைப்பதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு என்ன வருத்தம் இருக்கிறது... கண்ணாடியை பார்த்து கரடி பொம்மை வாங்க வருகின்றனர் என்று, அவர் உவமை கூறுகிறார். ஸ்டாலின் கூறும் உவமைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார்; யாருக்கு சொல்கிறார் என்பதே தெரியவில்லை.
- தமிழக சட்ட அமைச்சர் சண்முகம்
'அப்போ, நடிகர் கமல் போல, ஸ்டாலின் மாறி வருகிறார் என்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் பேட்டி.
ஹிந்து தெய்வங்களை, தி.மு.க., தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. எம்.பி., யாக இருந்த ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தை, 'ரத்தமா' என, கேலி செய்தவர் கருணாநிதி. ஹிந்துக்களை திருடர்கள் என்றும் கூறினார். தி.மு.க., - எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.,வில், 90 லட்சம் ஹிந்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்; அப்படி என்றால், அவர்கள் அனைவரும் திருடர்களா?
- பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

'திருடர்களின் ஓட்டுகளை குறிவைத்து தான், தி.மு.க., தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு.
அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் என அறிவித்துள்ளது, தி.மு.க., கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது. உதயநிதி கைது செய்யப்பட்டது, எங்கள் கூட்டணிக்கு மேலும் ஒரு விளம்பரமாக அமைந்துள்ளது.
- எம்.பி., சண்முகம்
'அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றல்லவா பேச்சு அடிபடுகிறது; அப்படியே, 'உல்டா'வாக கூறுகிறீர்களே...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி.,யும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலருமான சண்முகம் பேட்டி.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வியாபாரிகளுக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். நலிந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரி கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கின்றனர்; இதற்கு தடை வேண்டும்.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா
'நாங்கள் கடை திறந்திருப்போம்; அரசு வந்து பொருட்களை வாங்க வேண்டும் அல்லது மக்களை வாங்கச் செய்ய வேண்டும் என்றும் கோருங்களேன்...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE