தஞ்சாவூர்: மின் கம்பி மீது நடந்து சென்று, மரங்களை அகற்றிய மின்வாரிய ஊழியரை, கிராம மக்கள் பாராட்டினர்.
'நிவர்' புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் மரங்கள் சாய்ந்தன. ஆடுதுறை - திருமந்துறை இடையே, உயர் மின்னழுத்தக் கம்பியில் மூங்கில் மரங்கள் சாய்ந்து, ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தன. அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டனர். கதிராமங்கலம் மின்வாரிய அலுவலக கள உதவியாளர் உலகநாதன், 44, நேற்று முன்தினம், மின்வாரிய பணியாளர்களுடன் அங்கு வந்தார். கை, கால்களில் எந்த பாதுகாப்பு உபகாரணமும் இல்லாமல், தலைக்கவசம் மட்டும் அணிந்தபடி, உயர் அழுத்த மின் கம்பியில், சர்க்கஸ்காரர் போல, 80 அடி தூரம் நடந்து, மின் கம்பிகளில் ஒன்றோடு ஒன்று சிக்கியிருந்த மூங்கில் மரங்களை, அரை மணி நேரமாக போராடி வெட்டினார். வெட்டப்பட்ட மூங்கில் மரங்களை அகற்ற, மற்ற மின்வாரிய பணியாளர்கள் கீழே இருந்து உதவினர். பின், உலகநாதன் மீண்டும் மின் கம்பியில் நடந்து, கீழே இறங்கினார். மீட்பு பணியில், உயிரை துச்சமாக மதித்து ஈடுபட்ட இவரின் செயலை, கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர். இதை, மொபைல் போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 'மின் ஊழியர் உலகநாதன் பணி பாராட்டத்தக்கது என்றாலும், அவரது உயிரும் முக்கியம். பாதுகாப்பு கருதி, உயரமான ஏணி மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் பாதுகாப்போடு பணியாற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE