ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், தற்போது, 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்தையொட்டிய கிராம மக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து, 100க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் இடம் பெயர்ந்தன. இதில், 55க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் வனச்சரக பகுதிக்கும், 30க்கும் மேற்பட்ட யானைகள், போடூர்பள்ளம் வனப்பகுதியிலும் முகாமிட்டிருந்தன. மேலும், பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு சென்ற, 25க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலம், மாலூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டன. இந்நிலையில், போடூர்பள்ளத்தில் முகாமிட்டிருந்த, 30க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனச்சரக வட்டவடிவு பாறைக்கு, நேற்று அதிகாலை சென்றன. மேலும், ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து, 10க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை அடுத்த நெகனூர் காப்புக்காட்டிற்கு நேற்று காலை வந்தன. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தற்போது, 40க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள், காட்டிற்குள் செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE