ஆத்தூர்: ''முதல்வரின் நடவடிக்கையால், மிகப்பெரிய புயல் ஒன்றும் இல்லாமல் கரையை கடந்தது,'' என, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஆத்தூரில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாற்றில் வெள்ளம் சூழ்ந்துவிடாமல் இருக்க, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, சிறிது, சிறிதாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. லட்சத்துக்கும் மேற்பட்டோர், பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு, மருந்து, உணவு தரப்பட்டுள்ளன. முதல்வரின் நடவடிக்கையால், மிகப்பெரிய புயல் ஒன்றும் இல்லாமல் கரையை கடந்தது. சென்னையில், ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்தபோது, முதல்வராக கருணாநிதி இருந்தார். அச்சூழலில், ஸ்டாலின், ஐந்தாம் மாடியில் பாதுகாப்பாக தங்கியிருந்தார். ஆனால், அ.தி.மு.க., மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது. முதல்வர் பழனிசாமி, கொட்டும் மழையிலும், செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டார். இதனால், அனைவரது கவனமும், அவர் மீது திரும்பியுள்ளது. இதையறிந்த ஸ்டாலின், 'புலன் விசாரணை' படத்தில் விஜயகாந்த் போல் உடையணிந்து, மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டார். தமிழகம், முதல்வர் பழனிசாமியை போன்று, இயல்பு, நேர்மை, எளிமையான தலைவரைத் தான் எதிர்பார்க்கிறது. தி.மு.க.,வின் எதிர்காலம் வீணாகி போய்விட்டது. வீழ்ச்சியை நோக்கி, அக்கட்சி சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் முதல்வர் ஆசை, பகல் கனவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE