திருவண்ணாமலை: ''திருவண்ணாமலையில், 28, 29 ஆகிய தேதிகளில் வெளியூர் நபர்கள் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை, தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அருணாசலேஸ்வரர் கோவிலில், அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்படும், 29ல், கோவிலினுள் பக்தர்கள் தரிசனம் செய்யவும், மலை மீது ஏறவும் அனுமதியில்லை. மேலும், 29, 30 ஆகிய தேதிகளில், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு, வரும் மூன்று நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் கிடையாது. வழக்கமாக இயக்கப்படும், 494 அரசு பஸ்கள், 90 தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படும். தீப திருவிழா, கால்நடை சந்தை நடத்த அனுமதியில்லை. மேலும், வெளியூர் பக்தர்கள், 28, 29 ஆகிய தேதிகளில், திருவண்ணாமலை நகருக்குள் வர அனுமதியில்லை. இம்மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்களும், திருவண்ணாமலைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களை கண்டறிந்து, நகரினுள் வராமல் தடுக்க, 15 செக்போஸ்ட், முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 2,110 போலீசார் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE