தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி: 'நிவர்' புயலால், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்யும் பணியில், காங்கிரசார் ஈடுபட வேண்டும்.
டவுட் தனபாலு: சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிடும் போலிருக்கே... அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைகள், தங்களது கட்சியினருக்கு இப்படி உத்தரவு போட்டிருக்கிறது சரி... அவங்களும், தேர்தலை மனசுல வச்சு, கடனை, உடனை வாங்கியாவது, நிவாரண உதவிகளை செய்வாங்க... ஆனா, பதவிக்கு மட்டுமே அடிச்சுக்குற உங்க கட்சியினராவது, நிவாரண உதவி செய்றதாவது... 'என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனாரு'ங்கற கதையா, நீங்களும் இப்படி அறிக்கை விடணுமாங்கிறது தான், என், 'டவுட்!'
பத்திரிகை செய்தி: 'புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்' என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டவுட் தனபாலு: நம்ம நாட்டுல, 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருக்குது... மற்ற பகுதிகள்ல எந்த பாதிப்பும் இல்லை... இந்த ரெண்டு மாநிலங்கள்ல மட்டும் தான், இயல்பு வாழ்க்கை பாதிக்குது... பேசாம இந்த தொழிற்சங்கங்கள், இந்த ரெண்டு மாநிலங்களுக்கு மட்டும், முழு அடைப்பை அறிவிச்சு செயல்படுத்தலாமே... நாடு தழுவிய முழு அடைப்புன்னு அறிவிச்சு, இப்படி மூக்கு உடைபடணுமாங்கிறது தான், என், 'டவுட்!'
பிரதமர் நரேந்திர மோடி: நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை, தேர்தல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த தேர்தல்களின் தாக்கம், நாட்டின் வளர்ச்சிப் பணிகளை பாதிக்கின்றன. எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் குறித்து, ஆழமாக ஆராய்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். இதேபோல, லோக்சபா, சட்டசபை, பஞ்சாயத்து தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: நல்ல யோசனை தான்... இந்த திட்டம் அமலுக்கு வந்தா, பல ஆயிரம் கோடி ரூபாய், மக்களின் வரிப்பணம், பல கோடி ஊழியர்களின் மனித உழைப்பு மிச்சப்படும்... ஆனா, தேர்தலுக்கு தேர்தல், பணம் வாங்கிட்டு ஓட்டு போடுற பலருக்கும், தேர்தலை வச்சே பொழப்பு நடத்துற பல அரசியல்வாதிகளுக்கும், இந்த திட்டம், வேப்பங்காயா கசக்கும்கிறதுல, 'டவுட்'டே இல்லை.!
வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்: 'நிவர்' புயலை வெற்றிகரமாக எதிர்கொண்டது போல, வங்கக் கடலில் அடுத்து வரவிருக்கும் தாழ்வு பகுதியையும் தீவிரமாக கண்காணித்து, வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
டவுட் தனபாலு: என்னங்க இது வம்பா போச்சு... புயல் பாட்டுக்கு சிவனேன்னு வந்துட்டு போகுது... இந்தப் புயலை வெற்றிகரமா சமாளிச்சிட்ட தைரியத்துல, அடுத்தப் புயலையும், வா, வான்னு வெற்றிலை, பாக்கு வச்சு கூப்பிடுறீங்களே... அது பாட்டுக்கு ஆந்திரா, ஒடிசான்னு போக நினைச்சிருக்கும்... உங்க அழைப்பை பார்த்துட்டு, இங்க திரும்பிடுமோன்னு தான், 'டவுட்'டா இருக்கு!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், உடனடி நிவாரணமாக, 5,000 ரூபாயை ரொக்கமாக வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: நல்ல யோசனை தான்... ஆனா, கொரோனாவால, அரசாங்கத்தின் கஜானா ஏற்கனவே காலியாகி, தள்ளாடிட்டு இருக்கே... அவங்க, பணத்துக்கு எங்க போவாங்க... பேசாம, உங்க கட்சியின் அறக்கட்டளையில இருந்து, இந்த நிவாரண உதவியை நீங்களே குடுத்தா என்ன...? நாலஞ்சு மாசத்துல தேர்தல் வேற வரப்போகுது... இந்த ஐடியாவை நீங்க செயல்படுத்தி பார்த்தா என்னங்கிறது தான் என், 'டவுட்!'
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: 'நிவர்' புயலை எதிர்கொள்வதில், தமிழக அரசு தயாராக இல்லை எனக் கூற முடியாது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். புயலை எதிர்கொள்ள தமிழக அரசு, எச்சரிக்கையுடன் இருந்தது. ஆனால், முன்னெச்சரிக்கையுடன் இல்லை.
டவுட் தனபாலு: 'கடவுள் இல்லேன்னா சொல்றேன்... இருந்தா நல்லாயிருக்கும்னு தானே சொல்றேன்'கிறது எல்லாம், சினிமாவுக்கு வேணா சரியாக இருக்கலாம்... அரசியல்ல எப்பவும், வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டா இருக்கணும்... இப்படியே புரியாம பேசிட்டு இருந்தீங்கன்னா, தேர்தல்ல, 'நோட்டா'வோட தான் நீங்க போட்டி போடணும்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE