'பான்பராக் வாயர்கள், அறிவு இல்லாதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள், வட மாநிலங்களில் ஓட்டு போடுவராம்... அங்கே வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வராம்... 'இங்கே, நம் தமிழகத்தில் வந்து பிழைப்பு நடத்துவராம்... இங்க இருக்கும் தமிழன் என்ன இளிச்சவாயனா?' என்றெல்லாம், தமிழகத்தின் பல மூலைகளிலும் குரல்கள், சில மாதங்களுக்கு முன் வரை கேட்டன.
ஆனால், அவர்கள் அவ்வளவு பேரும், 'கொரோனா' எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமி படுத்தியபாடில், வேலை இழந்து, சாப்பிட சாப்பாடும், குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் படாதபாடு பட்டு, மனசே இல்லாமல் சொந்த ஊருக்குப் போய் சேர்ந்துள்ளனர். அங்கே அவர்கள் தற்போது, பிழைப்புக்காக என்ன செய்கின்றனர் எனத் தெரியாது. ஆனால், இங்கே நேற்று வரை அவர்கள் செய்து கொண்டிருந்த எல்லா வேலைகளும், அப்படி அப்படியே கிடக்கின்றன. அவர்களை திட்டிக் கொண்டு, சும்மா இருந்த தமிழர்கள், அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற பிறகும், அவர்கள் பார்த்த வேலைகளை எடுத்துச் செய்யவில்லை.அப்படியென்றால், தமிழகத்தில் என்ன நடக்கிறது...
ஒரு பக்கம், ஏராளமான இளைஞர் சக்தி வீணாகப் போகிறது. எத்தனையோ இளைஞர்கள் வேலையின்றி இன்றும் வீட்டில் இருக்கின்றனர். ஆனால், இருக்கும் ஏராளமான வேலைகளைச் செய்ய, வட மாநிலங்களில் இருந்து ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். வழக்கம் போல, 'என்னப் படிப்பு படித்தால் என்ன; இங்கே வேலை கிடைக்கவில்லை' என்ற புலம்பல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அதே நேரம், 'ஏகப்பட்ட முதலீடு போட்டு, தொழில் துவங்கி விட்டேன்; ஆனால், வேலைக்கான சரியான ஆள் தான் கிடைக்கவில்லை. இங்கிருக்கும் இளைஞர் சக்தியை வைத்து தொழில் செய்யலாம் என நினைத்தால், 500 ரூபாய் சம்பளம் பெறும் இடத்தில், 1,500 ரூபாய் கொடுக்க முடியுமா...' என்று கேட்கும் போக்கும் இங்கே உள்ளது.'ஐநுாறு கொடுக்கும் இடத்தில், 1,500 கொடுத்தால், எப்படி தொழில் செய்ய முடியும்; அதில் எப்படி லாபம் பார்க்க முடியும்; வட்டிக்கு வாங்கி, தொழில் நடத்துவோர், வட்டி கட்டுவதற்காகவாவது லாபம் ஈட்ட வேண்டாமா?' என்ற மன கேள்விகளுக்கு மாற்று ஏற்பாடு தான், வட மாநிலத்தவர் மீதான பார்வை.
மது எனும் அரக்கன்
அவர்களுக்கு, 500 ரூபாய் கொடுக்க வேண்டிய வேலைக்கு, 300 ரூபாய் கொடுத்தால் போதும். காலை, 6:00 மணிக்கு எழுந்து, இரவு, 10:00 மணியையும் தாண்டி, மாங்கு மாங்கென்று வேலை பார்க்கும் பக்குவத்தோடு, படை படையாக அணிவகுத்து நின்றனர். இதனால், தொழில் செய்யும் அத்தனை பேரும், வட மாநிலத்தவரை விரும்பினர். விளைவு,- சாதாரண டீ கடையில் துவங்கி, பெரும் தொழில் நிறுவனங்கள் வரை, லட்சக்கணக்கான வட மாநிலத்தவர் தமிழகம் முழுதும் நீக்கமற நிறைந்திருந்தனர். திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திலும், வட மாநிலங்களின் தொழிலாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.
அதிகபட்சம் மாசத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்.காலையில் இருந்து இரவு வரை சலிப்பில்லாமல் வேலை பார்ப்பர். இருக்க இடமும், உணவும் கூடுதல் செலவு தான்; இருந்தாலும், தங்க மாட மாளிகையோ, உண்ண, புகாரி ஓட்டல் பிரியாணியோ அவர்கள் கேட்பதில்லை. எட்டடிக்கு எட்டடி இடமும், சப்பாத்தியும், உருளைக் கிழங்கும், வெங்காயத் துண்டுகளும் கொடுத்தால் போதும். கேள்வி எதுவும் கேட்காமல், சந்தோஷமாக அதை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல; அதே சந்தோஷத்தோடு, காலை முதல் இரவு வரை வேலை பார்ப்பர். மொழி புரியாததால் மட்டும், சில சமயங்களில் சில சங்கடங்கள் ஏற்பட்டன. எனினும், பழகி விட்டால், விசுவாசத்திலும் குறைவில்லாமல் இருந்தனர். இப்படி, வட மாநிலத்தவர், தமிழகத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் எளிதாக தங்களைப் புகுத்திக் கொண்டது எப்படி என யோசித்தால், தமிழர்களை பற்றிக் கொண்ட மது எனும் அரக்கன் தான் முடிவாக வருவான்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, இலை மறை காய் மறையாக நிகழ்ந்து கொண்டிருந்த மது பழக்கம், இன்று, ஒவ்வொரு வீட்டிலும் குடிக்காத ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நிலைமை விபரீதத்தைத் தொட்டிருக்கிறது. ஆண் தான் குடிக்கு அடிமையாகி, தன்னை சீரழித்துக் கொள்கிறான் என்றால், பெண்களும், ஆணுக்கு இணையாக எல்லா விஷயங்களிலும் போட்டி போடுவது போல, போதையிலும் போட்டிக்கு வந்து விட்டனர்.
தடம் மாறுகின்றனர்
குடிக்கு அடிமையானவர்களை வைத்து, தொழில் நிறுவனங்கள் வேலை வாங்க வேண்டும் என்றால், எப்படி செய்ய முடியும்... அதையும் மீறி, கட்டுமானப் பணிக்கு ஒரு கொத்தனாரை வேலைக்கு அமர்த்தினால், அவர் ஒரு நாளைக்கு கூலியாக கேட்பது, 1,200 ரூபாய். அவர்களில் பெரும்பாலானோர் குடிக்கு அடிமையானவர்கள். அவர்களால், வேலையையும் முழுமையாக பார்க்க முடிவதில்லை. நான்கு மணி நேரம் தாண்டியதுமே, அவர்களின் கை-, கால்கள் ஆடத் துவங்குகின்றன. மாலையில், 'டாஸ்மாக்' கடைகளுக்குச் செல்லவில்லை என்றால், வேறு ஏதும் விபரீதங்கள் கூட நடக்கலாம்.இப்படியெல்லாம் கூடுதலாக சம்பளம் கொடுத்தாலும், அந்த சம்பளப் பணத்தை, குடும்பத்துக்கு எடுத்துச் செல்கின்றனரா என்றால் கிடையாது. வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேலானதை, டாஸ்மாக்கில் செலவழித்து விடுகின்றனர். இதனால், பலருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. பாலியல் தொடர்பான விவகாரங்களில் சிக்குகின்றனர். இதனால், முறையற்ற உறவுகள் பெருகுகின்றன. குடும்பமும், குழந்தைகளும் சரிவர கவனிக்கப்படாமல், தடம் மாறி செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையால், வட மாநிலத்தவரின் உழைப்பை, தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தேடினர், தேடுகின்றனர்.
இதற்கிடையில், 100 நாள் வேலைத்திட்டம் குறித்தும் சொல்லியாக வேண்டும். வேலை இல்லாத ஏழைகளுக்கு வேலை கொடுத்து, அவர்களுக்கு வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உன்னதமான எண்ணத்தோடு, மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் தான், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம். காலை, 10:00 மணிக்கு வேலைக்குப் போனால், பகல், 2:00 மணிக்குத் திரும்பி விடலாம். ஆனால், எவ்வித சிக்கலும் இல்லாமல், அவரின் வங்கிக் கணக்குக்கு, 150 ரூபாய் வந்து விழுந்து விடும்.இதனால், சிறிய டீக்கடைகள் முதல், பெரிய நிறுவனங்களின், கீழ்நிலை உதவியாளர் வரை, பலதரப்பட்ட பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விட்டது.இன்னொரு முக்கியமான விஷயம், அரசு தரும் இலவசங்கள். ரேஷனில், 20 கிலோ அரிசி கொடுக்கும் அரசு, கிரைண்டர், மிக்சி என கொடுக்கத் துவங்கியதன் விளைவு, - உழைக்கும் எண்ணம், தமிழக ஏழைகளுக்கு போய் விட்டது.
இப்படி பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் தமிழனுக்கு வேலை கிடைக்காமல் போனது மட்டுமல்ல, தொழில் செய்ய வந்த பலரும், சரியான தொழிலாளர்கள் அமையாமல் நஷ்டம் அடைந்து, தொழிலை விட்டு விட்டு செல்லும் நிலையும் உருவாகியது.தொழிலை விடாமல் நடத்திக் கொண்டிருக்கும் பலரும், வேறு வழியே இல்லாமல், தமிழர்களை பணியில் அமர்த்தாமல், வட மாநிலத்தவரை தேடிச் சென்று விட்டனர்.
பணப்புழக்கம் பாதிப்பு
வட மாநிலத்தவர், பானி பூரி விற்கத் தான் லாயக்கானவர்கள் என, சொல்லி வந்த நிலை மாறி விட்டது. இழிவாக, வட மாநிலத்தவரை பார்த்த நிலை மாறி, இன்று, வட மாநிலத்தவர் செய்த, பானி பூரி வியாபாரத்தை, தமிழர்கள் பலரே செய்யும் நிலை வந்து விட்டது.கொரோனாவுக்கு பிறகு, வட மாநிலத்தவர் பெருவாரியாக இன்னும், தமிழகம் வராததால், தமிழகத்தில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. கொத்தனார், கார்பென்டர், பிளம்பர் என அனைத்து வேலையும் பார்க்கும் வட மாநிலத்தவர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.இதே வேலையை செய்த, வட மாநிலத்தவர், மாதந்தோறும் குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தி, தங்கள் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் அனுப்பினர். இப்படி, தமிழகம் முழுக்க, இருபத்தைந்து லட்சம் வட மாநிலத்தவர், மாதம்தோறும், 2,500 கோடி ரூபாயை, தமிழகத்தில் இருந்து, வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இப்போது அந்த பணம், தமிழகத்தில் தான் புழங்குகிறது; ஆனால், எங்கே இருக்கிறது என்பது தான் தெரியவில்லை.தற்போது, கொரோனா பாதிப்பை அடுத்து, வட மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் அவ்வளவு பேரும், சொந்த மாநிலங்களில் இருப்பதால், அவர்கள் இல்லாமல் இங்கே யாரும் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களை, தமிழகம் திரும்பி வர, எல்லா தொழில் நிறுவனங்களும் அழைப்பு விடுத்து வருகின்றன. எனவே, அவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவர். அப்போது, தமிழர்களின் வேலைகளை, நம் வட மாநில சகோதரர்கள் பார்க்கும் நிலை ஏற்படும்.எனவே, வட மாநிலத்தவர் போல, மனநிலையை நம் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பு தான் உயர்வு தரும் என நினைத்து, ஓய்வின்றி உழைக்க முன்வர வேண்டும். வட மாநில சகோதரர்கள் செய்த வேலைகள் அனைத்தையும், நம்மவர்களே செய்ய வேண்டும். அதற்காக, வட மாநிலத்தவர்களுக்கு போட்டியாக, அவர்களை இங்கிருந்து விரட்டி, அவர்களின் வேலைவாய்ப்பை பறிக்க வேண்டும் என சொல்லவில்லை.மாறாக, கடினமாக உழைக்கும் மனப்பான்மையை தமிழர்கள் பெற வேண்டும். இல்லையென்றால், தமிழர்கள் பிழைப்புத் தேடி, வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்; அல்லது பசி-, பட்டினியில் கிடந்து அல்லாட வேண்டும்.உழைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு தமிழர்கள் வந்துவிட்டாலே போதும்; தமிழர்கள் உழைப்பால் தமிழகம் தலை நிமிரும்; அந்நிலையை ஏற்படுத்துவோம்!
புதுமடம் ஜாபர் அலி,
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
மொபைல்: 93805 -72368
இ - மெயில்: pudumadamjaffar1968@gmail.com