லக்னோ : உத்தர பிரதேசத்தில், கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அவசர சட்ட மசோதாவிற்கு, மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தின்படி, வலுக்கட்டாயமாக பெண்களை மதம் மாற்றி, திருமணம் செய்யும் ஆண்களுக்கு, 10 ஆண்டு வரை, சிறைத் தண்டனை கிடைக்கும்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, சமீப காலமாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உ.பி., ஹரியானா, மத்திய பிரதேசம், உள்ளிட்ட, பா.ஜ., ஆளும் மாநிலங்களில், அந்த முறைக்கு எதிராக, கடுமையான சட்டம் இயற்ற, மாநில முதல்வர்கள் முடிவு செய்தனர்.
புதிய சட்ட மசோதா
கட்டாய மத மாற்றத்தை ஒழிக்கும் வகையில், புதிய சட்ட மசோதாவை, உத்தர பிரதேச அரசு, சமீபத்தில் நிறைவேற்றியது.கடந்த, 24ம் தேதி, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்ததும், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு, மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கவர்னரின் ஒப்புதலுடன், 2020ம் ஆண்டின், சட்டவிரோத மத மாற்றம் தடுப்பு அவசர சட்டம், உத்தர பிரதேச மாநிலத்தில், தற்போது அமலுக்கு வந்துள்ளது' என்றார்.இந்த அவசர சட்டத்தின் வாயிலாக, இனி, வலுக்கட்டாயமாக இளம்பெண்களை திருமணம் செய்து, மதம் மாற்றம் செய்ய முடியாது; அவை, குற்றச்செயல்களாக கருதப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், போலீசாரிடம் புகார் அளித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யலாம்.
10 ஆண்டு சிறை
அப்படி, பெண்களை மதம் மாற்றி, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை; 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, இந்த அவசர சட்டம் வழிவகுக்கிறது.இதைத் தவிர, அத்தகைய கட்டாய திருமணம், சட்டப்படி செல்லாது என்றும் அறிவிக்கப்படும்.
அதே நேரத்தில், ஒருவர், தான் பிறந்த மதத்திற்கு மீண்டும் மாறுவது, இந்த புதிய சட்டப்படி குற்றமல்ல; அது, மதம் மாற்றமாக கருதப்படாது. அபராத தொகையை தவிர்த்து, கட்டாய மதமாற்ற முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடாக, ஐந்து லட்சம் ரூபாய் வரை, குற்றவாளிகள் வழங்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின், சுய விருப்பத்துடன் மதம் மாற விரும்பும் பெண்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம், அதற்கான விண்ணப்பத்தை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE