இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தற்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து, இந்த காலகட்டத்தில் சில விஞ்ஞான முன்னேற்றங்களைப் பற்றி சிந்திக்க, இது சரியான நேரம்.
இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு இணையற்ற முன்னோடியாகத் திகழ்ந்தவர், சர் ஜகதீஷ் சந்த்ர போஸ்.இந்தியாவுடன் சேர்ந்திருந்த வங்காள மாகாணமான, தற்போதைய வங்கதேசத்தின், மைமன்சிங் என்ற இடத்தில், 1858-ம் ஆண்டு நவம்பர், 30ல் பிறந்தார். தந்தை பகவன் சந்த்ர போஸ், வங்க மாகாணத்தில் பரித்புர் நகரின் துணை நீதிபதி மற்றும் துணை கமிஷனராக இருந்தார். பிரம்ம சமாஜத்தின் தலைவராகவும் இருந்தார். தாய், பாமா சுந்தரிதேவி.
விஞ்ஞான மனப்பாங்கு
பகவன் சந்த்ர போஸ், வங்க மொழியில் பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு சாதாரண கிராமியப் பள்ளியிலேயே, ஜகதீஷ் சந்த்ர போசைச் சேர்த்தார். துணை நீதிபதியின் மகனாக இருந்தபோதும், ஏழை எளிய மக்களுடனேயே படித்து, அவர்களோடு விளையாடி மகிழ்ந்தார். அவர்கள் கூறிய பறவைகள், விலங்குகள், நீர் வாழ்வன பற்றிய கதைகளை மனம் ஒன்றிணைந்து கேட்டு வியந்தார்.
மின்மினிப் பூச்சிகள், ஆறுகள், துளிர்விடும் விதைகள், தழைத்து வளரும் தாவரங்கள், விளக்கை நாடும் விட்டில் பூச்சிகளின் செயல்களுக்குக் காரணங்களைத் தந்தையிடம் கேட்டுக் கேட்டு, சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார். 'நீ மற்றவர்கள் யாரையும் ஆள ஆசைப்படாதே; மாறாக, உன்னையே நீ ஆள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்' என தந்தை சொல்லிக் கொடுத்ததை, தாரக மந்திரமாக ஏற்றார்.
உயர்நிலைக் கல்வி கற்க, 1869-ல் போஸ், கோல்கட்டா வந்தார். ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் பேச, எழுத, போஸ் சற்று சிரமப்பட நேர்ந்தது. சக மாணவர்கள், குறிப்பாக ஐரோப்பிய மாணவர்கள், இவரை கேலியும் கிண்டலும் செய்தனர். இதற்காக, தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், ஆங்கிலம் கற்றார். இதே சின்னஞ்சிறு போஸ், பிற்காலத்தில் ஐரோப்பிய ஆங்கில விஞ்ஞானிகளுக்கே, ஆங்கில மொழியில் பேசியே, ரேடியோ அலைகள் பற்றியும், மின்காந்த அலைகள் பற்றியும், செமி கண்டக்டர்கள் பற்றியும், ரேடியோ கோயெரர் பற்றியும் சொல்லிக் கொடுத்து, தாவரங்களுக்கும் நம்மைப் போன்றே உணர்வும், உயிரும் உண்டு என்ற அடிப்படை அறிவைப் பற்றியும் கற்பித்தார்.
கடந்த, 1880ல் பிரிட்டன் சென்று, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், 1884-ல், தாவர இயல் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். இவருக்குப் பேராசிரியராக இருந்த லார்டு ரேலெய்க், பிற்காலத்தில், இவரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை உலகம் அறிய, முக்கிய
பங்காற்றினார்.
போசின் விஞ்ஞான ஆராய்ச்சிகள் - இயற்பியல் துறை
கடந்த, 1885 முதல் மின்காந்த அலைகள் மற்றும் தெரி ஒளிக்கற்றைகள் ஆகியவற்றைப் பற்றி, போஸ் ஆராயத் துவங்கினார். இந்த ஆராய்ச்சிகளின் பயனாக, உலகில் நுண் அலைகளை உருவாக்கி பரப்பி, திரும்பப் பெறும் கருவிகளை உருவாக்கினார். ஆகவே போஸே முதன்முதலாக மின்காந்த அலைகளில் ஒரு வகையான, இந்த மைக்ரோ அலைகளை உருவாக்கி, பரப்பி உள்வாங்கும் கருவியை, பொதுமக்கள் முன்னிலையில் வெற்றிகரமாகச் செய்து காண்பித்தார்.
கடந்த, 1894-ல் கோல்கட்டாவில் மிகப் பெரிய கூட்டத்தின் நடுவே, ஒரு குமிழை அழுத்தி, தடிமனான சுவரைத் தாண்டி, அடுத்த அறையில் இருந்த ஒரு மணியை ஒலிக்கச் செய்தார். விஞ்ஞான முன்னேற்றமே இல்லாத அந்த காலத்தில், கம்பியோ, ஒயரோ தொடர்பே இல்லாத வகையில், இதைச் செய்து காண்பித்தார்.
இதன்மூலம் எவ்வித கம்பி மற்றும் ஒயர் தொடர்பில்லாமலேயே, செய்திகளை வெகு தொலைவுக்கு அப்பால் அனுப்ப முடியும் என்பதை உலகில் முதன்முதலாக போஸ் நிரூபித்துக் காட்டினார்.இந்த மைக்ரோ மின்காந்த அலைகளைத் தான் இன்றைக்கு ரேடாரில், தரைவழி தொலைத்தொடர்பில், செல்போன் தொழில்நுட்பம் மற்றும் மைக்ரோ ஓவன்களில் நாம் பயன்படுத்துகிறோம்.
தாவரவியல் ஆராய்ச்சிகள்
தாவரங்களுக்கு உயிருண்டு என்ற உண்மையை, போஸ் தான் கண்டுபிடித்தார். இந்த உணர்வுப் பரிமாற்றம், ரசாயன மாற்றம் மூலம் நடைபெறுவதில்லை; மின்மாற்றம் மூலமே நடைபெறுகிறது என்று கண்டுபிடித்தார்.'தாவரங்கள் இனிய இசை, பிரியம், கனிவுமிக்க வார்த்தைகள் இதன் மூலம் வளர்ச்சியும், நல்லதிர்வுகளையும் பெறுகின்றன. மாறாக, கொடூரமான சப்தம், கொடூரமான வார்த்தைகள் தாவரங்களில் பாதகமான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இது தாவரங்கள் அன்பையும், வலியையும் உணர்கின்றன என்பதைக் காட்டுகிறது' என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
தாவரங்கள், தொடர்ச்சியான, நிலையான மின்சாரத் துடிப்புகளை உற்பத்தி செய்கின்றன என்று கண்டார். தாவரங்களில், ஒரு எலக்ட்ரோ மெக்கானிக்கல் துடிப்பு நிகழ்கிறது. ஒரு நரம்பு மண்டலம் செயல்படுகிறது. ஒரு வகையான புத்திசாலித்தனத்துடன், தாவரங்கள் நினைவில் கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் திறன் கொண்டவை என்றார். நுாறு ஆண்டுகளுக்குப் பிறகு, தாவரங்களின் நினைவாற்றல், கற்றல், ஞாபக சக்தி மற்றும் நீண்ட தூர மின் சமிக்ஞை போன்ற அறிவார்ந்த கருத்துகள், பிரதான விஞ்ஞான நுால்களில் இடம் பெற்றன.
தாவர ஆராய்ச்சியில் போசின் ஆர்வம் காரணமாக 1970ம் ஆண்டு, கோல்கட்டாவில், 'போஸ் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடம்' நிறுவப்பட்டது. அமெரிக்க பால்டிமோரில் ஒரு புகழ்மிக்க வரலாற்று மின்னணு அருங்காட்சியகம் உள்ளது. அதில் சர் ஜகதீஷ் சந்த்ர போசின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், எல்லைகளுக்கு அப்பால்: இயற்பியலில் இருந்து தாவர அறிவியல் வரை' என்ற தலைப்பில், ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்து, இந்திய விஞ்ஞானி போசைப் பெரிதும் பாராட்டியது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 'ஜெனீவாவில் உள்ள ஐ.நா., சபையில், ஜகதீஷ் சந்த்ரபோசின் படம் வைக்கப்பட வேண்டும். அது அந்த சபையின் மதிப்பை உயர்த்தும்' என்றார்.
தேவை இந்தியாவில் விஞ்ஞான மறுமலர்ச்சி
இவ்வாறு பல்வேறு துறைகளிலும் நன்மை புரிந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியே, சில சந்தர்ப்பங்களில் மனிதனின் அழிவுக்கும் காரணமாகி விடுகிறது.போர் ஆயுதங்கள், அணுஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் என மனிதகுலத்தின் பேரழிவுக்குக் காரணமாகும் கருவிகளையும் கண்டுபிடிக்கிறோம்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சி, மனிதகுலத்தின் நல்வாழ்விற்கு பயன்பட வேண்டும். விஞ்ஞானத்தின் துணையுடன், வாழ்வு வளம்பெற வேண்டும். இந்த முயற்சிகள் பலனளித்தால், போசின் விஞ்ஞான வாழ்வும், பணியும், அடுத்து வரும் காலங்களில் இந்திய ஆராய்ச்சி மனப்பான்மையை, மேலும் ஊக்குவிக்கும். மீண்டும் ஒரு விஞ்ஞான மறுமலர்ச்சி, இந்தியாவில் ஏற்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE