சென்னை :''தமிழகத்தில், கொரோனா தொற்று இரண்டாவது அலை உருவாகவில்லை,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுடன், இணை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்கு, 120 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு, நேற்று துவக்கப்பட்டது.சிறப்பு பிரிவை துவக்கி வைத்த, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
நாட்டிலேயே முதன் முறையாக, கொரோனா தொற்றுடன், இணை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, சென்னையில், சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
உலக அளவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உள்ளது. தமிழகத்தில், இரண்டாவது அலை உருவாகவில்லை.இங்கு தொற்று குறைந்து வருகிறது. இப்போது தான், பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.பனி, மழை மற்றும் பண்டிகை காலங்களில், கொரோனாவை கையாள்வது சவாலாக உள்ளது; மிகுந்த கவனம் தேவை.அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அவசியம். அனைவரும் தொடர்ந்து, மூன்று வாரம் முக கவசம் அணிந்தால், தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்காது.புயல் பாதித்த பகுதிகளில் இருந்து, 1.36 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, கொரோனா தொற்று பரவல் ஏற்படவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
'கோவிஷீல்டால்' பாதிப்பா?
நாடு முழுதும், 17 மையங்களில், 1,600 பேருக்கு, 'கோவிஷீல்டால்' தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவ
மனைகளில் பரிசோதனை நடத்தப்படுகிறது.இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட, சென்னையைச் சேர்ந்த, 40 வயது தன்னார்வலருக்கு, உடல்நல குறைவு ஏற்பட்டதால், பரிசோதனையில் இருந்து விலகியுள்ளார். மேலும், உடல்நல பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை. அனைவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது, ஒருவருக்கு பாதிப்பு இருப்பதாக வந்துள்ள தகவல் குறித்து, விசாரிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE