சென்னை,: 'தனியார் மருத்துவ கல்லுாரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை போல, அரசு மருத்துவ கல்லுாரிகளில், கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:அரசு கல்லுாரி அடிப்படையில் கவுன்சிலிங்; ஆனால், கட்டண வசூல், தனியார் கல்லுாரி மாதிரி என்பது கொடுமையாக இருக்கிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை குறிப்பேட்டில், ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லுாரிக்கான கட்டணம், 4 லட்சம் ரூபாய் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. திடீரென இந்த கட்டணத்தை, 5.44 லட்சம் ரூபாயாக உயர்த்தி, இம்மாதம், 12ம் தேதி அரசு அறிவித்துள்ளது.
ஈரோடு ஐ.ஆர்.டி., பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியின் கல்விக்கட்டணம், 3.85 லட்சம் ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இந்த இரண்டு கல்லுாரிகளும், அரசு நடத்தும் தனியார் மருத்துவ கல்லுாரிகளா அல்லது அரசு கல்லுாரிகளா என்ற சந்தேகமும், கவலையும் எல்லா மாணவர்களுக்கும் எழுகிறது.
ஏனென்றால், அரசு மருத்துவ கல்லுாரிகளின் கல்விக் கட்டணம், 13 ஆயிரத்து, 670 ரூபாய். பல் மருத்துவ கல்லுாரி கட்டணம், 11 ஆயிரத்து, 610 ரூபாய். இந்த கட்டணங்களை, ஈரோடு ஐ.ஆர்.டி., பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லுாரியிலும் வசூலிப்பது தான் நியாயம். ஆனால், அவை இரண்டு கல்லுாரிகளையும் அரசு கல்லுாரிகள் என, அறிவித்து விட்டு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ளது போல் கல்வி கட்டணம் வசூல் செய்வதை உடனே தடுக்க வேண்டும்.
மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு, 2 லட்சம் ரூபாய் என்று நிர்ணயித்திருப்பது, பல மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும்.இந்த வருமான வரம்பை, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினால் தான், சமூக நீதியும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE