சென்னை: தமிழகம் முழுதும், டிசம்பர், 15க்குள், 2,000 'மினி கிளினிக்'குகள் துவக்கப்படும் என,முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், தற்போது, அது நிறைவேற்றப்படுகிறது. அதேநேரத்தில், ''அரசு எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா தொற்று பரவல் குறைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு நிலை திரும்ப, சற்று அவகாசம் தேவை,'' என்று, முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை இரவு நிறைவடைய உள்ளது.ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று காலை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

மகிழ்ச்சி
கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், 'நிவர்' புயலால், தமிழகத்திற்கு பெரும் பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது.சிறப்பாக நடவடிக்கை எடுக்க உதவிய, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களுக்கு நன்றி. தமிழகத்தில், புயல் தாக்கப் போவதை அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை அளிப்பதாக தெரிவித்து, தேவையான குழுக்களை அனுப்பி வைத்தார்.
பிரதமர் நேற்று முன்தினம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புயல் பாதிப்புகளை கேட்டறிந்தார்.அத்துடன், மத்திய அரசு தேவையான உதவி களை வழங்கும் என, அவர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் வெள்ள நீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்கும்.மருத்துவ நிபுணர்கள் குழுவின், அறிவுரைகளை பின்பற்றி செயல்பட்டதால், கொரோனா வைரஸ் பரவல், தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக, 7,526 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை, 5.22 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 2.79 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். மருந்துகள், பரிசோதனை கருவிகள், முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் போன்றவை, தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
பாராட்டினார்
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, உரிய முறையில், சிகிச்சை அளிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகம் முழுதும், 2,000 மினி கிளினிக்குகள், டிச., 15க்குள் துவக்கப்படும்.இந்தியாவிலே, தமிழகம் தான் சிறந்த முறையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணிகளை மேற்கொண்டதாக, பிரதமர் மோடி பாராட்டினார்.மேலும், மற்ற மாநிலங்களுக்கும், தமிழகம் முன்னோடி யாக திகழ்கிறது என்றார்; அதற்கு நன்றி.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.பல மாநிலங்களில், சரியாக விதிகளை கடைப்பிடிக்காததால், நோய் பரவல் அதிகரிக்கிறது. தமிழகத்தில் நோய் குறைந்து, இயல்பு நிலை திரும்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு எடுத்த நடவடிக்கைகளால், நோய் தொற்று பரவல் குறைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு நிலை திரும்ப, சற்று அவகாசம் தேவைப்படுகிறது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
என்னென்ன நோய்க்கு சிகிச்சை?
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுதும் பரவலாக, மினி கிளினிக்குகள் அமைக்கப்படும். நகர் மற்றும் கிராமப்புறங்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த கிளினிக்குகளில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப் படும்.
இதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். சென்னையில், குடிசை மாற்று பகுதி, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி என, 200 இடங்களில், மினி கிளினிக்குகள் அமைக்கப்படும்.மினி கிளினிக்கில், ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவ பணியாளர் இருப்பர். இதன் வாயிலாக, அனைத்து தரப்பு மக்களும் பயனடைவர். இவ்வாறு, அவர் கூறினார்.
ஊரடங்கு நீட்டிப்பா?இன்று அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை இரவு நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து, நேற்று காலை மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் இ.பி.எஸ், ஆலோசனை நடத்தினார். மாலையில், மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், 'வீடியோகான்பரன்ஸ்' வழியே பங்கேற்றார். கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் கூறிய ஆலோசனைகள்அடிப்படையில், ஊரடங்கு தொடர்பானஅறிவிப்பை, முதல்வர் இன்று வெளியிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE