புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆமதாபாத், ஐதராபாத், புனேயில் உள்ள, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஆய்வகங்களில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு, விபரங்களை அவர் கேட்டறிந்தார்.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணி, பல நாடுகளில் தீவிரமாக நடந்து வருகிறது. நம் நாட்டிலும் மூன்று தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
குஜராத் மாநிலம் ஆமதாபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஆய்வகங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
![]()
|
'ஜைடஸ் கேடிலா'
ஒரே நாளில், மூன்று நகரங்களுக்கும் நேரில் சென்று, நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள், தடுப்பூசி பணிகள் குறித்து, அவருக்கு விளக்கினர். டில்லியில் இருந்து நேற்று காலை சிறப்பு விமானத்தில் புறப்பட்ட மோடி, ஆமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து, 20 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ள, 'ஜைடஸ் கேடிலா' மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் வளாகத்துக்கு சென்றார். அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தடுப்பூசி தயாரிப்பதற்கான நடைமுறைகள், அதில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவை குறித்து, அதிகாரிகள் அவருக்கு விபரமாக தெரிவித்தனர்.ஜைடஸ் கேடிலா நிறுவனத் தலைவர் பங்கஜ் படேல், அவரை வரவேற்று, ''அடுத்தாண்டு மார்ச்சுக்குள் பரிசோதனைகள் முடிவடையும்,'' என, உறுதியளித்தார். ஆண்டுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகள் அங்கு தயாரிக்கும் வசதி உள்ளதையும், அவர் விளக்கினார்.
அங்கிருந்து, ஐதராபாதின் ஹகிம்பட் விமானப்படை வளாகத்தை சென்றடைந்தார். அங்கிருந்து, 20 கி.மீ., தொலைவில், ஜெனோம் வேலி பகுதியில் உள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் வளாகத்துக்கு சென்றார்.
![]()
|
விஞ்ஞானிகள் விளக்கம்
ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரஸ் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற மருந்தை, இந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது.உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த தடுப்பூசியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து, நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண இலா, உயரதிகாரிகள், விஞ்ஞானிகள் விளக்கினர். தற்போது, மூன்றாம் கட்டப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி உள்ளது.அங்கிருந்து புனேவுக்கு பயணம் செய்தார், மோடி. புனே விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம், 17 கி.மீ., தொலைவில் உள்ள மஞ்சரியில் அமைந்துள்ள, 'சீரம் இந்தியா மையம்' நிறுவனத்தின் வளாகத்துக்கு சென்றார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை, 'ஆஸ்ட்ரா ஜெனகா' நிறுவனம் உருவாக்கியுள்ள, 'கோவாஷீல்ட்' தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை, சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் தலைவர், டாக்டர் சைரஸ் புனேவாலா, அவரது மகனும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான, அதார் புனேவாலா உள்ளிட்டோர் வரவேற்று, அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து விளக்கினர். அங்கிருந்த விஞ்ஞானிகள், தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, மோடியிடம் விளக்கினர்.மூன்று நிறுவனங்களுக்கு மேற்கொண்ட பயணங்களுக்குப் பின், தனித்தனியாக, சமூக வலைதளத்தில், மோடி பதிவிட்டிருந்தார்.தடுப்பூசி தயாரிப்பில்தீவிரமாக உள்ள, இந்த நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு, அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.மூன்று நகரங்களுக்கான பயணத்தை முடித்து, மோடி, நேற்று இரவு, டில்லிக்கு திரும்பினார்.
வருகிறது குளிர்சாதன பெட்டி
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி, ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், அது கிடைத்ததும், அதை பாதுகாப்பாக வைத்திருக்க, அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதற்கான திட்டங்களும் நடந்து வருகின்றது.இந்த தடுப்பூசிகளை பாதுகாக்க, குளிர்சாதன பெட்டிகள் தேவை. ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வதற்காக, நடமாடும் குளிர்சாதன வசதி உள்ள வாகனங்கள் தயாரிக்கும் ஆலை, குஜராத்தில் அமைய உள்ளது. ஐரோப்பிய நாடான, லக்சம்பர்க் உடன் இதற்கான பேச்சு நடக்கிறது. அந்த நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டல், சமீபத்தில், பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது இது குறித்து விவாதிக்கப்பட்டது.
உடனடியாக, குஜராத்தில் ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, ஆலை அமைக்க, இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். மைனஸ், 20 டிகிரி செல்ஷியஸ் வரை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வகையில், இந்த வாகனங்கள் அமைக்கப்பட உள்ளது. இது, சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ், உருவாக்கப்பட உள்ளது.அதற்கு முன்பாக, குளிர்சாதன பெட்டிகளை அனுப்புவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. லக்சம்பர்கைச் சேர்ந்த, 'பி மெடிக்கல் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச்சில், இந்த குளிர்சாதன பெட்டிகள், நம் நாட்டுக்கு வர உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE