புதுடில்லி : போராட்டம் நடத்த வடக்கு டில்லியில் இடம் ஒதுக்கப்பட்டும், டில்லிக்குள் நுழையாமல், பஞ்சாப் விவசாயிகள், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு, பஞ்சாப் உட்பட சில மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லிக்கு பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தப் போவதாக, பஞ்சாப் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி, பஞ்சாபில் இருந்து விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். ஹரியானா எல்லையில், நேற்று முன்தினம் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாலை தடுப்புகளை துாக்கி வீசி, தடைகளை மீறி பேரணி நடத்த முயன்றனர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது சில இடங்களில், போலீசார் மீது, விவசாயிகள் கற்களை வீசினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு டில்லியில் உள்ள நிராங்கரி மைதானத்தில் போராட்டத்தை நடத்த, டில்லி போலீசார் அனுமதி வழங்கினர்.மேலும், டிச., 3ம் தேதி பேச்சு நடத்த வரும்படி, விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கு, மத்திய அரசும் அழைப்பு விடுத்துஉள்ளது.ஆனால், டில்லிக்குள் நுழையாமல், டில்லியின் எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் விவசாயிகள் நேற்று முகாமிட்டு, அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: ஜந்தர் மந்தர் பகுதி யில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டோம். ஆனால் மறுத்துவிட்டனர். தற்போது, வடக்கு டில்லியில் இடம் ஒதுக்கி உள்ளனர். மேலும், 50 பேர் குழுக்களாக செல்லும்படி கூறியுள்ளனர்; இது, விவசாயிகளை பிரிக்கும் முயற்சி. நாங்கள் ஒன்றாகத்தான் வந்தோம்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து, மேலும் பல விவசாயிகள் இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.அதனால், டில்லி எல்லையிலேயே நாங்கள் முகாமிட்டுள்ளோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பேச்சு நடத்த தயார்: அமித் ஷா
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நேற்று வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில் கூறியுள்ளதாவது:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன், டிச., 3ம் தேதி பேச்சு நடத்த தயாராக உள்ளோம்.அதற்கு முன்னதாகவே பேச்சு நடத்த விரும்பினால், அதற்கும் தயார்.
ஆனால், அரசு நிர்ணயித்துள்ள இடத்துக்கு போராட்டத்தை மாற்ற வேண்டும். அவ்வாறு செய்த மறுநாளே பேச்சு நடத்துவோம். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள், அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க, அரசு தயாராக உள்ளது. இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE