நன்றாக பாடும், பேசும் திறமை உடைய, 1,200 பெண்களை தேர்வு செய்து, அவர்களை அசாம் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறக்கி அசரடிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது,
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு மத்தியில், சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.
வியூகம்
![]()
|
மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முடிவுடன் உள்ளது, பா.ஜ., மேலிடம். இதையடுத்து, அசாம் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளும், வியூகங்களும், டில்லியில் தீவிரம்
பெற்றுள்ளன.அதில் ஒன்றுதான், 'பியா நாம்' பெண்கள் திட்டம். 'பியா' என்றால் திருமணம். 'நாம்' என்றால் பாடல்கள். அசாம் சமுதாயத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த, 'பியா நாம்' பாடல்கள், வெகு பிரபலம்.திருமண நிகழ்வில் பின்பற்றப்படும் பல்வேறு சடங்குகளின்போது, இந்த பாடல்களை பெண்கள் பாடி, அசத்துவர். இத்தகைய, 'பியா நாம்'களை பாடும் பெண்களைத்தான், பா.ஜ., இம்முறை, தேர்தலுக்கு பயன்படுத்த வியூகம் வகுத்துள்ளது. இந்த பாடகர்கள் தான், கடந்த சில மாதங்களுக்கு முன், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது நடந்த போராட்டங்களில் பெரும் பங்கு வகித்தனர். நாடு முழுதும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நிலை காணப்பட்டபோது, அதற்கு மாறாக, இந்த பாடகர்கள், இந்த சட்டத்துக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். இவர்களில், சிறப்பாக பேசியும், பாடியும் அசத்தக்கூடிய விஷய ஞானமும் உடைய, 1,200 பெண்களை, அடையாளம் காணும்படி, அம்மாநில நிர்வாகிகளுக்கு, பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டது.
திட்டம்
இவர்கள், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான மாநில அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை, கிராமம் கிராமமாக சென்று, பாடல்களை பாடியும், பேசியும், மக்களிடம் பிரபலப்படுத்துவர். மேலும், 'பூத் கி பாத்' என்ற பெயரில், மாநில, மாவட்ட, பூத் கமிட்டி அளவில் கருத்தரங்குகள், நடத்தப்படவுள்ளன. மத்திய, மாநில அரசுகளின், நலத் திட்டப் பயனாளிகளை கண்டறிந்து, அவர்களை அழைத்து வந்து, பேசுவதுதான் இதன் நோக்கம்.இந்த நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் உட்பட, தேசிய அளவில் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் அசாம் செல்லஉள்ளார். அந்த பயணத்தின்போது, அசாம் சட்டசபைத் தேர்தல் குறித்த விரிவான திட்டமும்
வகுக்கப்பட்டுவிடும். அதன்பின், தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் துவங்கி விடும் என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள். - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE