புதுடில்லி: இந்திரா முதல், ராகுல் வரை, அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் கீழ் பணியாற்றியவர் என்ற சிறப்பு, சமீபத்தில் மறைந்த, காங்., மூத்த தலைவர் அகமது படேலுக்கு உண்டு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்விளைவுகள் காரணமாக, 71வது வயதில் மரணம் அடைந்தார்.குஜராத்தை சேர்ந்த அகமது படேல், மூன்று முறை லோக்சபா, ஐந்து முறை ராஜ்யசபா எம்.பி., ஆக இருந்தவர். தன், 26 வது வயதில், எம்.பி.,யாக பார்லிமென்டிற்குள் நுழைந்தவர். காங்., தலைவர் சோனியாவின் அரசியல் செயலர், காங்., பொருளாளர் என, பல பொறுப்புகளை வகித்தவர். கடந்த, 2004ல், இவர் வகுத்துக் கொடுத்த உத்திகளை பின்பற்றி, சோனியா அமைத்த, ஐ.மு., கூட்டணி, வாஜ்பாய் அரசை வீழ்த்தியது.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல், காங்., அடிமட்டத் தொண்டர்கள் வரை, அன்பாக பழகக் கூடியவர் அகமது படேல். ராகுல் தலைமையில் அதிருப்தி அடைந்து, ஓய்வு பெறுவதாக நெருக்கமானவர்களிடம் கூறிய அவர், சோனியா மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்றதும், சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கினார். மக்கள் மத்தியில் பிரபலமான தலைவர் அல்ல என்றாலும், காங்., என்றால், அவர் தான் என சொல்லும் அளவிற்கு, அவரது செல்வாக்கு இருந்தது.

கட்சியில், பல பிரச்னைகளை சுலபமாக தீர்க்கும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. சோனியா, அரசியலில் தனக்கு ஏதாவது பிரச்னை என்றால், முதலில் அகமது படேலுக்குத் தான் போன் செய்வார். இதற்காகவே, அகமது படேல், தனி மொபைல் போன் வைத்திருந்தார். அந்த போன் எண்ணை தன் மனைவிக்கு கூட தெரிவிக்காமல் இருந்தார் என்பதில் இருந்து, அவரது விசுவாசத்தை புரிந்து கொள்ளலாம். காங்., மிகவும் பலவீனமடைந்துள்ள தற்போதைய சூழலில், அகமது படேலின் மறைவு, அக்கட்சிக்கு மட்டுமின்றி, சோனியாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட, பேரிழப்பு எனலாம்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE