வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில், பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றார்.ஆனால், 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது. அதனால் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார்.தேர்தல் முடிவுகளை எதிர்த்து, பல்வேறு மாகாணங்களில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பென்சில்வேனியா மாகாண தேர்தல் தோல்வியை எதிர்த்து, டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மாகாணத்தின், 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் மாகாணப் பிரதிநிதிகள் குழுவின், 20 ஓட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தது; அது, பைடனுக்கு கிடைத்தது.டிரம்ப் தொடர்ந்த வழக்கை, கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், டிரம்ப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும், நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. 'தேர்தல் முடிவுகளை, வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள் அல்ல. வெளிப்படையான தேர்தல் நடத்தப்படுவதுதான், நம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாமல், மோசடி நடந்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது' என, நீதிமன்றம் கூறியுள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, டிரம்ப் தரப்பு முடிவு செய்துள்ளது.
கமலா ஹாரிஸ் புகழாரம்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள, இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், சமூக வலைதளங்களில் கூறியுள்ளதாவது:நம்மிடையே உள்ள மிகச் சிறந்த நபரான ஜோ பைடன், அதிபராக பதவியேற்க உள்ளார். உலக நாடுகள் மதிக்கக் கூடிய, நம் குழந்தைகள் முன்னுதாரணமாக பார்க்கக் கூடியவராக, அவர் திகழ்கிறார். நாட்டின் அனைத்து மக்களின் அதிபராக அவர் இருப்பார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திகளில், ஜோ பைடன் கூறியுள்ளதாவது:நம் நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை நாம் அனைவரும் இணைந்து எழுதுவோம். நம் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவோம். வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஒவ்வொருவரும் எடுக்கும் நடவடிக்கையும் முக்கியமானதாகும். ஒரு உயிரைக் காப்பாற்றுவதாக, அது அமையும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE