உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை. ரத்தத்தில் உண்டே உதவுமனம்...- எத்தனையோ பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும் வித்தன்றோ எந்தன் படை. பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மையப் படையணிக்கு வாழ்த்துகள்.
- நடிகர் கமல்ஹாசன்
'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் நீதி மையத்தினர் வென்று விடுவர் போலிருக்கிறதே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை.
அரசு கஜானாவை அண்டி பிழைப்பதற்கு, ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்து, புளகாங்கிதமடைந்த டில்லி கொடுங்கோலர்களுக்கு ஆதரவளித்து, ஒன்றரை மணி நேரம் உண்ணாவிரதமிருந்து செப்படி வித்தை செய்து, தமிழினத்தை முறியடித்த சூழ்ச்சியாளர்களிடமிருந்து சாணக்கியரின் வியூகம் தமிழர்களை, தமிழினத்தை மீட்டெடுக்கும்.
- தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'நீங்கள் சொல்வது, தி.மு.க., பற்றியும், அமித் ஷா பற்றியும் தான் என்பது நன்றாக தெரிகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
காங்., வசந்தகுமார் எம்.பி., மறைவால், காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிட வேண்டும்.
- எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'அவர், சிவனே என, டில்லியில் சொகுசாக வாழ்கிறார். தேரை இழுத்து தெருவில் விடுவது போல, அவரை ஏன், குமரிக்கு அழைத்து வர நினைக்கிறீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை.
தி.மு.க., நாடகம் ஆடும் கட்சி. முதலில், அதன் தலைவர் ஸ்டாலின், நாடகம் ஆடிக் கொண்டிருந்தார். இப்போது அவர் மகன் உதயநிதி, நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
- அமைச்சர் ராஜு
'அப்போ, அ.தி.மு.க., சினிமா கட்சியா என, தி.மு.க.,வினர் கேட்கின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு அறிக்கை.
காலம் தாழ்ந்து தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்ற அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளதால், வறுமை காரணமாக கைநழுவவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் அந்த மருத்துவ இடங்கள் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாம் தமிழர் சீமான்
'தேர்தலுக்குள் கண்டிப்பாக, நம் முதல்வர் அறிவித்து விடுவார்; அந்த அளவுக்கு, எதிர்க்கட்சிகள், 'பிரஷர்' கொடுத்து வருகின்றன...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான், வட மாநிலங்களில் முற்போக்கு சக்திகள் தோற்று போயின. நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ, இந்த மண்ணையோ விட்டுக் கொடுத்தது கிடையாது.
- புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி

'பாராட்டப்பட வேண்டிய ஒன்று; வாழ்த்துகள்...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி பேச்சு.
உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது' என்ற பழமொழியை மெய்ப்பிப்பதாக உள்ளது. அவரின் செயல்பாடுகள், மகிழ்ச்சியைத் தருகின்றன.
- மறைந்த தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மகன் அன்புச் செல்வன்
'அப்படி என்ன அந்த பெரிய புலி செய்தது... இப்போது இந்த சின்னப்புலி செய்து விட்டது என்பது, மாபெரும் கேள்வியாக உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், மறைந்த தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மகன் அன்புச் செல்வன் அறிக்கை.
மாநிலத்தில், சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் அவதுாறு பிரசாரங்களை தடுக்க, போலீஸ் சட்டத்தில் மேற்கொள்ள இருந்த திருத்தம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டபின் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
'இந்த விவகாரத்தில், இப்படி தடாலடி முடிவுகள் அவசியமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை.
ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண்ணில், சமூக நீதிக்கு விரோதியான, பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,வும் ஆட்சி அமைப்பது பகல் கனவாகவே அமையும்.அக்கட்சிகள் வேண்டுமானால், 'நோட்டா'வுடன் போட்டியிடலாம்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'இப்படி, முட்டு கொடுத்தே, திராவிடர் தலைவர்களில் நீங்களும் ஒருவராகி விட்டீர்கள்...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாது என, எந்தச் சட்டமும் கிடையாது. அவர்கள், அரசியலுக்கு வந்தால், செயல்பாடுகளை பார்த்து மக்கள் தான், அவர்களை அங்கீகரிக்க வேண்டும். பா.ஜ.,விலும் வாரிசுகள் அரசியலுக்கு வருகின்றனர். வாரிசுகள் அரசியலுக்கு வருவது, இங்கு மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறது.
- எம்.பி., திருநாவுக்கரசர்
'பிற நாடுகளில் சேவையாக இருக்கும் அரசியல், நம் நாட்டில் தொழிலாக அல்லவா கருதப்படுகிறது; அதனால் தான், வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு இருக்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE