மத்தியில், 2014ல் ஆட்சி அமைத்த பின், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் நிலைக்கு, பா.ஜ., முன்னேறியது. ஆனால், பஞ்சாபில் மட்டும் அதன் பாச்சா பலிக்கவில்லை. அடுத்த தேர்தலை மனதில் வைத்தே, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில், மத்திய அரசு அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.
கொந்தளிப்பு
கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி அரசு அமைந்தது.பஞ்சாப் மட்டுமே, இதில் விதிவிலக்காக உள்ளது.பா.ஜ.,வின் மூத்த தலைவரான, மறைந்த அருண் ஜெட்லி மற்றும் ஹர்திப் சிங் பூரி, அமிர்தசரஸ் தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.சீக்கிய சமூகத்தினருக்கான கட்சியான, அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்தும், பா.ஜ.,வுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மோடி அலை, ஹிந்துத்துவா, தேசியவாதம் என்ற முகங்கள் இருந்தும், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்காததற்கு, விவசாயிகளின் ஆதரவு பெற முடியாதது காரணமாக கூறப்படுகிறது.

நாட்டிலேயே அதிக அளவு விவசாயிகள் உள்ள, மஹாராஷ்டிராவில் கூட, புதிய வேளாண் சட்டங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், பஞ்சாபில் மட்டும் கொந்தளிப்பு உள்ளது. இந்தப் போராட்டத்தில், ஹரியானா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேச விவசாயிகள் பங்கேற்றாலும், பஞ்சாப் விவசாயிகள் தான் முன்னின்று நடத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு உள்ளது.மேலும், முக்கிய எதிர்க்கட்சியான அகாலி தளமும், ஆதரவு தெரிவித்துள்ளது.மற்ற வட மாநிலங்களில், சிறுபான்மையினர் அதிகம் உள்ளனர். பஞ்சாபில், முஸ்லிம் உட்பட, சிறுபான்மையினர் எண்ணிக்கை, மக்கள் தொகையில், 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதனால், ஹிந்துத்துவா கொள்கை இங்கு எடுபடவில்லை என கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபைக்கு, 2022ல் தேர்தல் நடக்க உள்ளது. தற்போது, அகாலி தளமும், கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அதனால், கட்சியை வலுப்படுத்தி, தேர்தலை தனியாக சந்திக்க, பா.ஜ., தீவிரமாக உள்ளது.
நடவடிக்கை வேண்டும்
'விவசாயிகள் பிரச்னையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்' என, கட்சித் தலைமைக்கு, மாநில பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் செயல்படும், பஞ்சாபி பாடகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, பேச்சு நடத்துவதற்கு வரும்படி, விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பிரச்னையை சமாளிப்பதன் வாயிலாகவே, பஞ்சாபில் பா.ஜ., வளர்ச்சி நிர்ணயிக்கப்பட உள்ளது. அதனால், வாய்ப்பை தவற விடுவதற்கு, பா.ஜ., தயாராக இல்லை என்பதுமட்டும் நிச்சயம்.-நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE