புதுடில்லி: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிலைகள் மீட்பு
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: நமது பாரம்பரியமிக்க மற்றும் விலை மதிப்புமிக்க மரபு சின்னங்களும் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடத்தி செல்லப்பட்டவைகளை மீட்டு கொண்டு வருவதில் இந்தியாவின் முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பல சிலைகளையும், கலைப்பொருட்களையும் மீட்டு கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம்.பழமையான தேவி அன்னபர்னா சிலை கனடாவில் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் கடத்தப்பட்ட அன்னபூர்னா சிலையை மீட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.
டிஜிட்டல்மயம்
சில நாட்கள் முன்பாகத்தான் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய வாரம் என்பது கலாசார விரும்பிகளுக்கு அற்புதமான சந்தர்பத்தை அளிக்கிறது. நூதனமான வழிவகைகளில் இந்த பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதை பார்த்தோம். நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் தகவல்கள் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். டில்லியில் தேசிய அருங்காட்சியகம் தொடர்பாக பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேசிய அருங்காட்சியகம் வாயிலாக சுமார் 10 மெய்நிகர் காட்சிகூடங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

கவனத்தை ஈர்க்கும் கலாசாரம்
நவ.,12ல் டாக்டர் சலீம் அலியின் 125ம் ஆண்டு பிறந்த நாள். பறவைகள் உலகில் பறவைகள் கண்காணிப்பில், அருஞ்செயல்களை ஆற்றியவர். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தவர். இந்தியாவின் கலாசாரம் என்றும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளன. இதுபோல ஜோன்ஸ் மேசெட்டி, பெட்ரோபோலிஸ் என்ற இடத்தில் இந்தியாவில் கற்ற வேதத்தை மற்றவர்களுக்கு கற்பிக்கிறார். நியூசிலாந்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி., டாக்டர் கவுரவ் வர்மா, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றார்.
நவ.,30 ல் ஸ்ரீகுருநானக் தேவின் 551வது பிறந்த நாளினை கொண்டாட உள்ளோம். வான்கூவர் முதல் வெல்லிங்கடன் வரை, சிங்கப்பூர் முதல் தென் ஆப்ரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது. நவ.,30ம் தேதி அன்று, ஸ்ரீ குருகோவிந்த் சிங் அவர்களின் 350 வது பிறந்த நாளும், ஆண்டு ஸ்ரீகுரு தேக் பகதூர் அவர்களின் 400 வது பிறந்த நாளும் வருகின்றன.
தன்னம்பிக்கை
தொழில்நுட்பம் வாயிலாக பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. நாட்டின் இளைஞர்கள் மத்தியில் இருப்பது, புத்துணர்வு, புதுசக்தியை அளிக்கும் வகையில் ஒரு நல்ல அனுபவமாக உள்ளது. பிறருக்கு பதக்கம் கிடைப்பதை பார்க்கும் பள்ளி பருவ மாணவர்களிடம் கனவுகள் உதயமாகும், தன்னம்பிக்கை பிறக்கும்.
உரிமை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விவசாய சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாய சீர்திருத்த சட்டத்திற்கு, நீண்ட விவாதத்திற்கு பின்னர் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சீர்திருத்தைமானது, விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
புகார் அளிக்கலாம்
விவசாயிகளிடம் அவர்களின் பொருட்களை வாங்குபவர்கள், அதற்கான விலையை கொடுக்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்திருப்பார். இது தான் நீண்ட நாட்கள் நடைமுறையில் இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த செப்., மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, விவசாயிகளிடம் பொருட்களை வாங்குபவர்கள் அதற்கான தொகையை 3 நாட்களில் வழங்க வேண்டும். தவறினால், அவர் மீது விவசாயிகள் புகார் அளிக்கலாம். அந்த புகாரை பெற்ற பின்னர், ஒரு மாதத்தில் மாவட்ட கலெக்டர் தீர்வு காண வேண்டும்.
விரைவில் தடுப்பு மருந்து
கொரோனா வைரசால் உலகின் முதல் நபர் பாதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன. ஊரடங்கில் இருந்து நாம் வெளியே வந்து கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா குறித்த எந்த கவனக்குறைவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக வலிமையுடன் போராட வேண்டும். கொரோனாவை தடுக்க அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE