சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.
01. இந்திய பாரம்பரியத்தில் சுவை
ஆசிரியர்: முனைவர் லட்சுமி ராமசுவாமி
வெளியீடு: ஸ்ரீ முத்ராலயா
ஜி - 1, என்.எஸ்., குடியிருப்பு,
19/4, கிழக்கு எல்லையம்மன் கோவில் தெரு,
கோட்டூர், சென்னை - 85.
அலைபேசி: 84385 45495
பக்கம்: 266 விலை: ரூ.500
பிரபல நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரிய ஆய்வு நுால். தமிழ் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியங்களில், 'சுவை' பற்றிய ஒப்பீட்டை வழங்குகிறது. ஆடற்கலை பற்றிய சங்க கால சாத்தனாரின் கூத்த நுாலை, பல சமஸ்கிருத நுால்களோடு ஒப்பாய்வு செய்து, அரிய தகவல்களை தந்துள்ளார்.
நாட்டியக்கலை நுணுக்கங்களை கூறுவதாக இருந்தாலும், நாட்டியக் கலையையே அறியாதவர் கூட புரியும் வகையில் எளிமையாக தந்திருப்பது பாராட்டத்தக்கது.
நடனக் கலையில் மிளிர விரும்புவோருக்கான ஆதார தகவல் களஞ்சியம். ஆடற்கலையின் அற்புதங்களை அறிய விரும்பும் நடன ஆசிரியர்கள், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால். தமிழ்த்தாய்க்கு அணி சேர்க்கிறது.
- ஜி.வி.ஆர்.,
02. கனவெனும் மாயசமவெளி
ஆசிரியர்: ஆர்னிகா நாசர்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 164 விலை: ரூ.180

ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு... கனவுக்குள் கிரைம்... த்ரில்லர்... கில்லர்... நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது.
மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு சமையல் இன்னும் வித்தியாசமானது. விவசாயிகளின் வயிற்றெரிச்சல், நுாறாண்டு சமையலை என்ன கதிக்கு கொண்டு வந்து விட்டதென்பதையும் விளக்குகிறார். எல்லாம் அரைநுாற்றாண்டு தாண்டி நடக்கும் நிகழ்வுகளாக விவரிக்கிறார். நாளைய சமுதாயம் உணவின்றி, தண்ணீரின்றி எப்படி தவிக்குமோ என பதைபதைப்பை தரும் சிறுகதை தொகுப்பு.
- எம்.எம்.ஜெ.,
03. ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்
ஆசிரியர்: ஜெயஸ்ரீ கிஷோர்
வெளியீடு: சத்யா பதிப்பகம்
பம்மல், சென்னை- - 78.
அலைபேசி: 94442 55557
பக்கம்: 262 விலை: ரூ.200

ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை விரதம், அதன் பலன் பற்றிய விளக்கங்களை எளிமையாகப் படிக்க முடிகிறது.
ஷீரடிக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, அதைச் சுற்றியுள்ள, 23 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சனீஸ்வரர் கோவில் உள்ளது போன்ற தகவல்கள் புதுமை. பாபாவுடன் இருந்த, 12 அருளாளர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
பாபா தினமும் பிச்சை எடுத்தே உண்பார். உணவளித்த பாயிஜபாயி அம்மையாருக்கு பாபாவின் மீது அளவற்ற பக்தி. சில நேரம், காட்டில் தியானத்தில் ஆழ்ந்து விடுவார் பாபா. தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவார் போன்ற தகவல்கள் பக்தி நீரை கோர்க்கின்றன.
- தி.செல்லப்பா
04. கருவறைத் தேசம்
ஆசிரியர்: முனைவர் இரா.சந்திரசேகரன்
வெளியீடு: நண்பர்கள் தோட்டம்
46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605 008.
அலைபேசி: 99944 55959
பக்கம்: 218 விலை: ரூ.180

கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார்.
வாழும் இக்கருவறை - பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் 'எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்' படிப்பவர் மனதிற்கு இன்பமூட்டி நீங்கா இடம் பிடிக்கின்றன. நீண்ட நம் வாழ்க்கைப் பயணத்தைப் போன்று, இக்கருவறைத் தேசமும் நீண்டு, பல்வேறு இன்ப, துன்பங்களை நினைவூட்டி மகிழச் செய்கிறது.
-- முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்
05. திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்
ஆசிரியர்: ஆ.இரத்தினம்
வெளியீடு:- கலைக்கோ
தமிழக்குடில், சென்னை - 91.
அலைபேசி: 94449 35692
பக்கம்: 168 விலை: ரூ.140

திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது.
திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது.
குடிசெயல் வகை , நாணுடைமை அதிகாரங்களைப் புதிய கோணத்தில் கண்டிருக்கிறார். உரையாசிரியர்களின் கருத்துகளை, குறிப்பாக பரிமேலழகர், நாமக்கல்லார், பாவாணர், கு.மோகனராசு கருத்துகளை மறுத்துள்ளார். தம் கருத்தினை நிறுவியிருக்கிறார். ஒவ்வொரு கருத்தையும் கூர்ந்து ஆய்ந்து படைக்கப்பட்டுள்ள நுால்.
- ராம.குருநாதன்
06. விடியல் தேடும் பூக்கள்
ஆசிரியர்: விஜய் மேகா
வெளியீடு: ஆகாஸ் பதிப்பகம்
வில்லிவாக்கம்,
சென்னை - 49.
அலைபேசி: 97907 88820
பக்கம்: 128 விலை: ரூ.100

சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பரமசிவம்என்ற விஜய் மேகா எழுதியுள்ளார். பல்வேறு நாடக நூலை இயற்றியுள்ளார். வட்டார வழக்கில் இந்த நாடக நூல் எழுதப்பட்டுள்ளது
சென்னையில் தொடங்கிய காதல், திருச்செந்துார் முருகன் சன்னதியில் மூன்று ஜோடிகளின் திருமணமாய் நிறைவடைந்ததை நகைச்சுவையாகவும் ரசனை மிக்கதாகவும் எழுதியுள்ளார்.
ஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்கள் நாடகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. ஆற்றொழுக்கான எளிய நடையில் எழுதப்பட்ட நுால்.
- ராமலிங்கம்
07. திருக்குறள் தெளிவுரை
உரையாசிரியர்: முகிலை இராசபாண்டியன்
வெளியீடு: முக்கடல், சென்னை - 91.
அலைபேசி: 94443 65642
பக்கம்: 304 விலை: ரூ.100

திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை வெளியாகியிருக்கும். அவற்றுள் சற்று மாறுபட்டிருக்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் என முன்னுரையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
எளிதில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் பதம்பிரித்து வெளியிட்டிருப்பதுடன் எளிமையான உரை விளக்கமாக உள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் ஓரளவு பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
08. உணர்வுகள் மோதும் பொழுது
ஆசிரியர்: மாந்துறை பாபுஜி
வெளியீடு: மணிமேகலைப்பிரசுரம்
தபால்பெட்டி: 1447, சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 342 விலை: ரூ.220

நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் - லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள். லுார்துவின் மகன் ஜோசப் நல்ல பையன். திடீரென்று திருத்த முடியாத குடிகாரன் ஆகிறான். அவன் ஏன் குடிகாரன் ஆனான் என்பது தான் கதையை வளர்க்கிறது.
காதல் தோல்வி அவனை குடிகாரன் ஆக்குகிறது. காதலித்த பெண் கிடைத்ததும் திருந்தி நல்ல மனிதன் ஆகிறான். சம்பவங்களை அடுக்கிச் செல்லும் முறையிலும் கதை மாந்தர் உரையாடலிலும் நேர்த்தி உள்ளது.
- எஸ்.குரு
09. முப்பொருள் விளக்கம்
பதிப்பாசிரியர்: முனைவர் நல்லுார் சா.சரவணன்
வெளியீடு: சைவ சித்தாந்தப் பெருமன்றம்
மயிலாப்பூர், சென்னை - 4.
தொலைபேசி: 044 - 2493 5109
பக்கம்: 96 விலை: ரூ.60
கடவுள், உயிர், உலகம் என்ற உண்மைப் பொருள்களை சைவ சித்தாந்தம் என்னும் தத்துவம் உறுதி செய்துள்ளது.
பதி, பசு, பாசம், மற்றும் ஆணவம், கன்மம், மாயை என பகுக்கப்பட்டவைக்கு விளக்கம் தருகிறது. திரிபதார்த்த விளக்கம், மாயா விளக்கம், தாயுமான சுவாமிகள் மதம், முப்பொருள் உண்மை, ஏகான்ம வாதமும் வைதிக சைவமும், கடவுள் உண்டா இல்லையா... என்ற தலைப்புகளில் பேசுகிறது.
சைவ சித்தாந்தக் கருத்துக்களை மிகவும் நுட்பமாகவும், எளிமையாகவும் இந்த நூல் விளக்குகிறது. பழைய இதழ்களைத் தேடி, நுால் வடிவம் தந்து, வெளியிட்ட பதிப்பாசிரியரின் முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது. படிக்கவேண்டிய நுால்.
- பேராசிரியர் இரா. நாராயணன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE