பார்த்தாலே கண்களுக்குள் இனிக்கும் சாக்லேட் சிலை... அழகையெல்லாம் அள்ளி வீசும் ஆனந்த அலை... தேகமெங்கும் மென்மையில் துள்ளும் முயல், மாடலிங் துறையில் மையம் கொண்ட புயல், சிரித்து சிரித்தே இதயங்களை சரிக்கிறாய், மெல்லிய நடையில் அசைவெனும் இறகை உதிர்க்கிறாய்... என வர்ணிக்க வைக்கும் மாடலிங் கனவு நாயகி ஹர்ஷா மனம் திறக்கிறார்...
புதுமுக மாடல் மங்கை ஹர்ஷாவின் அறிமுகம்
கோவைக்கார பொண்ணு... பி.காம்., படித்துவிட்டு வேலை பார்த்தேன். சின்ன வயதிேலயே மாடலிங், நடிப்பில் ஆர்வம். இந்த துறையில் ஜெயிக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் வந்திருக்கேன்.
நம்பிக்கை மட்டும் தானா வேறு யாராவது உற்சாகம்
நல்லா மாடலிங் பண்றேன்னு சிலர் சொல்வாங்களே தவிர யாரும் உற்சாகம், ஒத்துழைப்பு தரலை. எனக்குள் இருக்கும் திறமையை வைச்சு தான் முயற்சி செஞ்சு, முன்னேறி வருகிறேன்.
மாடலிங் துறை உங்களை எப்படி ஏற்று கொண்டது
இந்த துறையில் நுழைவது கஷ்டம். நான் 'டஸ்கி ஸ்கின்' வேற. நடிக்க போனால் பல பிரச்னைகளை சந்திக்கணும்னு கஷ்டப்பட்டு வந்தேன். அதுவா ஏற்று கொண்டதான்னு தெரியலை. ஆனால், நான் ஏற்று கொள்ள வைச்சிருக்கேன். மாடலிங், நடிப்பில் தோற்றம் பார்க்காமல் திறமைக்கு முக்கியத்துவம் தரணும்.
விளம்பர படத்தில் நடிப்பது எளிமை தானே
இல்லை... சினிமாவில் நடிப்பது போல் இதுவும் கஷ்டம் தான். நாம் செய்யும் கேரக்டராக மாறினால் தான் விளம்பரம் நன்றாக வரும். பிஸினஸ் விஷயம் என்பதால் கூடுதல் கவனம் தேவை. பெரிய நடிகர், நடிகைகள் விளம்பரங்களில் வரும் போது புதுமுகங்கள் வர அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.
புதுமுகமான உங்களுக்கு கிடைக்கும் வருமானம்
மாடலிங்கில் சிலர் பேமென்ட் இல்லாமல் ஷூட் செய்து 'குலாப்ரேஷன் ஷூட்' என்பார்கள். அதனால், இன்ஸ்டாவில் 'புராடக்ட் ஷூட்' செய்வேன். பொருட்கள், பேமென்ட் கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்க நாள் ஆகும்.
இந்த துறைக்காக எப்படியெல்லாம் மாறினீர்கள்
ஆரம்பத்தில் வெயிட் குறைவாக இருந்ததால் வாய்ப்புகள் வரவில்லை. ஜிம் சென்று 10 கிலோ வெயிட் கூட்டினேன். தினமும் வீட்டில் பிட்நஸ் செய்கிறேன். இதைவிட கண்டிப்பான குடும்பத்தில் இருந்து மாடலிங் மங்கையாக மாறியது சவாலாக இருந்தது.
இதுவரை செய்த மாடலிங்
விளம்பர படங்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி டிவிக்களில் ஓடும் பெரிய பிராண்ட் ஒன்றின் விளம்பர படத்தில் 'லீட் மாடல் ' பண்ணிருக்கேன். இந்தியா அளவில் பிரபல நிறுவன விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறேன். எனக்கு நானே மேக்கப் செய்ய அழகியல் கலையும் கற்றேன்.
- ஸ்ரீனி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE