சென்னை : நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நாளை(நவ.,29) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை அவரின் அரசியல் வருகைக்கான நிகழ்வாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டாக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ரஜினி நிச்சயம் களம் இறங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் சில வாரங்களுக்கு முன் உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரவில்லை என ஒரு அறிக்கை வெளியானது. அந்த விஷயம் பொய்யான தகவல், ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம் உண்மை என்றார் ரஜினி. இதனால் அவர் அரசியலுக்கு வருவது கேள்விக்குறியானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென நாளை(நவ., 30) ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு அனுமதி கேட்டு போலீசிடமும் ரஜினி அனுமதி கோரி உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடக்க இன்னும் ஐந்தாறு மாதங்களே உள்ள நிலையில் ரஜினியின் இந்த கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு தான் வருகிறாரா இல்லையா என்பதை ரஜினி தெளிவுப்படுத்துவார் என தெரிகிறது. இதனிடையே ரஜினியின் கூட்டத்தை அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். நாளைய கூட்டத்தில் அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டாக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.
அவரின் பல படங்களின் ஓபனிங் காட்சிகளையும், பஞ்ச் வசனங்களையும் சுட்டிக்காட்டி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சும். வழக்கம் போல் ரஜினி வருகிறேன், வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விடுவார் என கூறி அவருக்கு எதிரான மீம்ஸ்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE