சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வண்டி மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து ‛டில்லி சாலோ' என்ற பெயரிலான டில்லி நோக்கிய பேரணியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பங்கெடுத்தனர். விவசாயிகள் டில்லி செல்வதை தடுக்க ஹரியானா போலீசார் எல்லையில் பல்வேறு தடுப்புகளை அமைத்து தடை விதித்திருந்தனர். அதையும் மீறி விவசாயிகள் முன்னேறியதை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது நவ்தீப்சிங், 26, என்னும் இளைஞர் ஒருவர் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வண்டி மீது ஏறி அணைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் தண்ணீரை அணைத்துவிட்டு அருகில் இருந்த டிராக்டர் மீது அவர் குதிப்பது பதிவானது. இந்நிலையில் நவ்தீப் மற்றும் அவரது தந்தை ஜெய் சிங் ஜல்பேரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போராட்டத்தின் போது இருவரும் டிராக்டருடன் வேகமாக வந்து போலீஸ்காரர்கள் மீது ஏற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இது குறித்து நவ்தீப் கூறியதாவது: பட்டம் பெற்ற பிறகு, எனது தந்தையுடன் விவசாயம் செய்யத் தொடங்கினேன். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதால் அந்த குழாயை அணைக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்தது. நாங்கள் அமைதியாக டில்லிக்குச் செல்ல முயன்றோம். ஆனால் போலீசாரால் தடுக்கப்பட்டோம். அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவும், மக்கள் விரோதச் சட்டங்கள் ஏதேனும் இயற்றப்பட்டால் எதிர்ப்பதற்கும் எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE