ஐதராபாத்: ஐதராபாத் மேயராக பா.ஜ.,வை சேர்ந்தவர் தேர்வு பெற்றால், அங்கு சிறந்த நிர்வாகம் அளிப்பதுடன், நகரை, ஐடி துறையின் மையமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச.,1 அன்று நடக்கும் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. செகந்திராபாத்தில் உள்ள வரசிகுடா என்ற இடத்தில் நடந்த பேரணியில் அமித்ஷா பங்கேற்றார். அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அமித்ஷா கூறியதாவது: ஐடி துறையின் மையமாக மாறும் திறன் ஐதராபாத்திற்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி தான் நிறைவேற்ற வேண்டும். ஆனால், தற்போதைய டிஆர்எஸ் காங்கிரஸ் நிர்வாகத்தில், அதற்கு பெரிய தடை ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்று நடந்த பேரணிக்கு பிறகு, பா.ஜ.,வின் இருப்பு மற்றும் உறுப்பினர் எண்ணிக்கைக்காக மட்டும் போராட்டமாக இந்த தேர்தல் இருக்காது எனவும், பா.ஜ.,வை சேர்ந்த ஒருவரே மேயராக இருப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உலகளவில், ஐதராபாத் நகரை ஐடி மையமாக மாற்றுவதற்கு ஆளும் டிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் பெரிய தடையாக உள்ளது. சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துகின்றன. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நகரம் இடர்பாடுகளை சந்தித்த போது, ஓவைசியும், முதல்வரும் எங்கே இருந்தார்கள். மாநகராட்சியில் நாங்கள் சிறந்த நிர்வாகத்தை தருவதுடன், ஐடி மையமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
150 வார்டுகள் கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு, டிச.,1 அன்று தேர்தல் நடக்கும் நிலையில், முடிவுகள் 4ம் தேதி வெளியிடப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE