ஒட்டாவா: கனடாவில் சீக்கிய பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள விவசாய மசோதாவை எதிர்த்து வீதியில் போராட்டம் நடத்தினர். இது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
கனடாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் குறிப்பாக சீக்கியர்கள் பலர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். கனடா பிரதமர் தேர்தலின்போது சீக்கியர்களின் வாக்கு மிகவும் முக்கியமானது. இதனை கவர்வதற்கு கனடாவில் உள்ள கட்சிகள் அவர்களுக்கு சலுகைகள் பலவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிப்பது வழக்கம். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இந்தியாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய சீக்கிய பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் அமைப்பின் தலைவன் கலந்துகொண்டு ஜஸ்டின் ட்ரூடோ உடன் நெருக்கமாக பேசியதாக கூறப்பட்டது.

பயங்கரவாத அமைப்புக்கு உலகின் எந்த நாட்டு தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்பது ஐநாவின் விதி. ஆனால் சீக்கியர்களின் ஆதரவைப் பெற காலகாலமாக ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று கனடாவின் எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றன. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் உள்ளன. இவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அரசு அனுமதியுடன் சிறிய போராட்டங்களை பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி நடத்தி வருகின்றனர். இது கனடா-இந்தியா உறவை பாதிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கனடியன் பெடரல் ஜனநாயக கட்சி தலைவர் ஜாக்மீட் சிங் தலைமையில் இந்திய விவசாய மசோதாவை எதிர்த்து கனடாவில் போராட்டம் பேரணி நடைபெற்று வருகிறது. டில்லியில் அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு வன்முறையை ஏவி விட்டு உள்ளது என்று இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை இந்திய அரசு கேட்பது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இவரது சகோதரர் குர்டான் சிங் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கனடா சட்டசபையில் உறுப்பினராக உள்ள இவரது போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டது தற்போது சர்ச்சையாகி உள்ளது. கனடாவில் காலிஸ்தான் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE