ஐதராபாத்:''ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., இடையேயான கூட்டணியால், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் மக்கள் கோபத்தில் உள்ளனர். ''அதனால், மாநகராட்சிக்கு நடக்கவுள்ள தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்தவரே மேயராக வெற்றி பெறுவார்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
ஆதரவு
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் ஐதராபாதில் மாநாகராட்சி தேர்தல், நாளை நடக்க உள்ளது; வரும், 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.இந்த தேர்தலுக்கான பிரசாரத்துக்கு கடைசி நாளான நேற்று, செகந்திராபாதில், அமித் ஷா பிரசாரம் செய்தார். முன்னதாக, ஐதராபாதில் உள்ள, பாக்யலட்சுமி தேவி கோவிலில் அவர் வழிபட்டார்.
தேர்தல் பிரசார பேரணியில், அமித் ஷா பேசியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடிக்கு, தெலுங்கானா மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதனால், நான்கு தொகுதிகளில், பா.ஜ., வென்றது. மாற்றம் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கான துவக்கம் தான் அது. இதற்கு அடுத்தது, ஐதராபாத் மாநகராட்சி.ஐதராபாதில் அடிப்படை வசதிகள் இல்லை. சமீபத்தில் பெய்த மழையில், ஐதராபாத் வெள்ளக்காடானது. அதற்கு முக்கிய காரணம், ஓவைசியின் ஆசியுடன் நடக்கும் ஆக்கிரமிப்புகளே.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., இடையே உள்ள இந்தக் கூட்டணியால், மக்கள் கோபத்தில் உள்ளனர்.வெள்ளம் ஏற்பட்டபோது, முதல்வர் சந்திரசேகர ராவோ, ஓவைசியோ வரவில்லை. ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் தான், மீட்பு பணியில் ஈடு பட்டனர். நம்பிக்கை இந்தப் பேரணிக்கு அதிக அளவில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதில் இருந்து, ஐதராபாத் மாநகராட்சி, பா.ஜ.,வைச் சேர்ந்தவர் தான், மேயராக வருவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
நிஜாம் கலாசாரத்தில் இருந்து ஐதராபாதை மீட்போம். தகவல் தொழில்நுட்பத்தில் சர்வதேச மையமாக மாற்றுவோம்; நவீன நகராக மாற்றுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
கவனத்தை ஈர்த்த பாக்யலட்சுமி கோவில்
'ஓல்டு சிட்டி' பகுதியில் அமைந்துள்ள,பாக்யலட்சுமி கோவில், இந்த தேர்தலில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியில அமைந்துள்ள இந்த கோவிலுக்கு, அமித் ஷா, சென்றார். மேலும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள், அங்கு தொடர்ந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்தக் கோவிலுக்கு செல்வதன் வாயிலாக, மத மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., குற்றஞ்சாட்டிஉள்ளன.
இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் குமார் கூறியதாவது:கோவிலுக்கு செல்வதற்கு முன் அனுமதியை பெற வேண்டுமா? இந்த விவகாரத்தில், வீணாக அரசியல் செய்கின்றனர். முஸ்லிம் மக்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அடிமையாகி விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. தேர்தல் நடப்பதால், நிவாரணம் வழங்குவதை நிறுத்தும்படி, தேர்தல் கமிஷன் கூறியது. சஞ்சய் குமார் கடிதம் எழுதியதால் தான், தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கூறியது.அதற்கு, 'பாக்யலட்சுமி கோவிலுக்கு, சந்திரசேகர ராவை வரச் சொல்லுங்கள். அங்கு அவர் முன் சத்தியம் செய்கிறேன்' என, சஞ்சய் குமார் சவால் விடுத்து இருந்தார்.
முன்னதாக, 'மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றால், ஐதரபாதின் பெயரை, பாக்யலட்சுமி நகர் என மாற்றுவோம்' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் கூறினார்.
'மரபு மீறல்'
தெலுங்கானா அமைச்சரும், சந்திரசேகர ராவின் மகனுமான, கே.டி. ராமாராவ் கூறியதாவது: ஐதராபாதில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியை பார்வையிட, பிரதமர் மோடி வருகை தந்தார். ஆனால் அவரை வரவேற்க, முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; இது, மரபை மீறிய செயல்.
அதே நேரத்தில், மோடியின் வருகை, மக்கள் உயிர் காக்கும் விஷயத்தில், தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்படுவதை அங்கீகரிப்பதாக அமைந்துவிட்டது. இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதை மோடியே ஏற்றுக் கொண்டுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE