தொகுதி பேரம் படியாதது, ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களால், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலைக்கு தள்ளப் படலாம் என, தெரிகிறது. அதனால், மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைப்பது குறித்த ரகசிய பேச்சு, தமிழக காங்கிரஸ் தரப்பில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக, அம்மாநிலத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி, அக்கட்சியின் வேட்பாளர்கள், அ.தி.மு.க.,விடம் தோல்வி அடைந்தால், ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம், தி.மு.க., மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், காங்கிரசுக்கு குறைந்தபட்சம், 20 தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், வருவாய் மாவட்டத்திற்கு தலா ஒரு தொகுதி என்ற அடிப்படையில், 38 முதல் 40 தொகுதிகளை பெறும் முடிவில் உள்ளது. 'பீஹார் சட்டசபை தேர்தலில், 70 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது என்றால், அதில், 35 தொகுதிகள், 30 ஆண்டுகளாக காங்கிரஸ் வெற்றி பெறாத தொகுதிகள்.
அந்த தொகுதிகளில் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும் வெற்றி பெற்றுள்ளன. 'அந்த தொகுதிகளை, காங்கிரஸ் தலையில் கட்டி விட்டனர். காங்கிரசும் பெருந்தன்மையாக ஏற்று போட்டியிட்டது. 'எனவே, அம்மாநில தேர்தல் முடிவை, தமிழக தேர்தலுடன் ஒப்பிடக்கூடாது' என, அறிவாலயத்தில், காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
சமீபத்தில், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, கவர்னரிடம், தி.மு.க., கோரிக்கை கடிதம் வழங்கியது. இது, காங்கிரசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலரும், ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான செல்லக்குமார் எம்.பி., அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது.
அவரது பேட்டி விபரம்:மனித உரிமை அடிப்படையில், ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யச் சொல்வதை, காங்கிரஸ் சார்பில், வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர் களுக்கும், இழந்தவர்களுக்கு தான் இழப்பின் வலி தெரியும். ராஜிவ் கொலையான போது, பலர் மரணம் அடைந்தனர். அவர்களின் மனித உரிமைக்கு, எந்த தலைவர் பதில் சொல்ல போகிறார்?
ராஜிவுடன் கொலையுண்டவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிந்திக்க வேண்டும். மனித உரிமை, மனிதாபிமானம், தமிழ் உணர்வு என, பேசும் தலைவர்களுக்கு தைரியம் இருந்தால், தன்னையும், தன் குடும்பத்தினரையும், எந்த தமிழனாவது கொலை செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சொல்வரா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
எனவே, ஏழு பேரை விடுதலை செய்யக் கூடாது என்பதில், காங்கிரசார் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் தொகுதி பங்கீடு, ஏழு பேர் விடுலைக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களால், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம். அதனால், அக்கட்சி, மூன்றாவது அணிக்கான வாய்ப்பை ஆராயத் துவங்கி உள்ளது.
அதாவது, கமலின் மக்கள் நீதி மையம், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் பல சிறிய கட்சிகளை இணைத்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியையும், ரகசிய பேச்சையும், காங்கிரஸ் துவங்கிஉள்ளதாக தெரிகிறது.முதல் கட்டமாக, கமலிடம் நடத்திய பேச்சுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதால், காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். சசிகலா விடுதலைக்கு பின், அ.தி.மு.க.,வில் வெளியேற்றம் நடக்கலாம் என, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
அந்த நேரத்தில், அ.ம.மு.க.,வின் ஆதரவு அதிகமாகலாம் என்றும், காங்கிரஸ் கணக்கு போடுகிறது. மேலும், அக்கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதரவு அதிகம் இருப்பதால், அக்கட்சியை, மூன்றாவது அணியில் சேர்ப்பது பலன் தரும் என, காங்கிரசார் நம்புகின்றனர். கமல், தினகரனுடன் காங்கிரஸ் சேரும் நிலை உருவானால், மேலும் சில சிறுபான்மை அமைப்புகளும், கட்சிகளும் இக்கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE