காரியாபட்டி:காரியாபட்டி பகுதியில் முன்பு செல்வ செழிப்பாக இருந்த விவசாயம் நிலங்கள் மழை வளம் குறைய தற்போது தரிசு நிலங்களாக மாறின. எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து மண் வளத்தை கெடுத்ததோடு விவசாயத்தை அடியோடு
ஆக்கிரமித்து கொண்டது.
விவசாயிகளும், செல்ல பிராணிகளான கால்நடைகளும் பாதித்தன . நிலத்தடி நீரை உறிஞ்சி கொழுத்து வளர்ந்த சீமைக்கருவேல மரங்கள் விவசாய நிலங்களை வறட்சியாக மாற்றின.
இதிலிருந்து மீள முடியாமல் தவித்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான போது நுாறு நாள் வேலைத்திட்டம் கை கொடுத்தது.
சில இடங்களில் இத்திட்டத்தின் மூலம் பயனுள்ள விஷயங்களை செய்தனர். அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக காரியாபட்டி வையம்பட்டியில் அரசு நிலங்களில் அடர்ந்து வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி குறுங்காடு அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். குறுகிய காலத்தில் பார்ப்பதற்கு அழகாக மரக்கன்றுகளை நட்டுகண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொண்டனர். வறட்சியாக இருந்த நிலத்தை தற்போதுபசுமையான சோலைவனமாக மாற்றிய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அங்கிருக்கும் ஊரணியை தூர்வாரி தண்ணீரை சேமித்து மரங்களுக்கும் கால்நடைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்படும் வகையில் மாற்றியிருப்பது அருமையிலும் அருமை.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உருவாக்கி 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறார்கள் அந்த பணியாளர்கள். இது போன்று அனைத்து பகுதிகளிலும் நுாறு நாள் பணி மூலம் சீமை கருவேல மரங்களை அகற்றி குறுங் காடுகளை ஏற்படுத்தினால் வருங்காலம் செழிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனந்தமே தனிதான்
வையம்பட்டி ரோட்டில் சென்ற போது எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்களாக இருந்தன. அதற்கு மத்தியில் வேம்பு உள்ளிட்ட மரங்களால் தோப்பு இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். ஜிலுஜிலுவென இருந்தது. இதை பார்த்து மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என்னால் முடிந்த வரையில் மரக்கன்றுகளை வாங்கி சமூக ஆர்வலர்களிடம் வழங்கி வருவதோடு நானும் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். வளர்ந்த மரக் கன்றுகளை பார்த்ததும் மனதுக்கு இதமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்.
பாஸ்கரன்,
சமூக ஆர்வலர், காரியாபட்டி
முன்மாதிரியால் மகிழ்ச்சி
சீமைக்கருவேல மரங்களால் ஊருக்கு வருவாய் ஈட்டி கொண்டிருந்தனர். இதை அப்புறப்படுத்தி மரங்களை வைக்க கிராமத்தினர் ஒத்துழைப்பு கொடுத்தனர். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பயனுள்ள விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முதலில் ரோடு ஓரங்களில் இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகளை நட்டோம். அதற்கு தேவையான தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது அங்கிருந்த ஊரணியை தூர்வாரி அதில் மழை நீரை சேமித்தோம். அதனருகே இருந்த அரசு நிலங்களை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு ஏற்படுத்தினோம். இதை பார்த்த பலரும் பெருமைப் படுகின்றனர். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பது மகிழ்ச்சியாக
இருக்கிறது.
ஜெயகிருஷ்ணன்,
பணித்தள பொறுப்பாளர் வையம்பட்டி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE