உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எம்.எல்.ராகவன், பணி நிறைவு பெற்ற இயற்பியல் பேராசிரியர், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்படும் குளறுபடி காரணமாக, மக்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும், அதை வேண்டாம் என, அறிவுறுத்தி வருகின்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரம் தயாரித்த போது இருந்த நிலைமை வேறு; இன்றைய, 'டெக்னாலஜி' உலகம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று, 'டெக்னாலஜி'யில், இவ்வுலகம் எவ்வளவோ முன்னேறி உள்ளது. இதனால் சுஜாதாவும்,அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்களும் கூறிய கருத்துகள், இன்றையகாலத்திற்குப் பொருந்தாது.
இன்று, தொலைவில் இருந்தே,'எலக்ட்ரானிக்' இயந்திரங்களின் செயல்பாட்டை, நம் விருப்பம் போல் மாற்ற முடியும். 'ஹாக்கிங்' எனப்படும், தகவல் திருட்டு இன்று சர்வ சாதாரணம். இந்நிலையில், எங்களை ஆள்வது யார் என, நாங்கள் தேர்ந்தெடுத்தது யாரை என்ற மக்களின் ஐயப்பாட்டை நீக்குவது, அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருத்தல் அவசியம். சீதை, தன்னைத் தூய்மையானவள் என்பதை, இந்த உலகத்திற்கு நிரூபிக்க, தீயில் இறங்கிக் காட்ட வேண்டியதாகிப் போனது.ஓட்டுப்பதிவு இயந்திரம், விருப்பப்படி மாற்றியமைக்க முடியாதது எனச்சொல்லிக் கொண்டே போவது, மேலும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

நம்மைவிடப் பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் மிக முன்னேறிய நாடுகளில், இப்போதும் ஓட்டுச் சீட்டுகள் தானே பயன்பாட்டில் உள்ளன. நாம் ஏன், இயந்திரத்தின் பயன்பாட்டை பிடிவாதமாகத் தொங்கியபடி இருக்க வேண்டும்? ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த, நம் தேர்தல் கமிஷன் ஏன் தயங்க வேண்டும்? அதில், சிறிது கால தாமதம் தவிர, வேறு பெரிய பிரச்னை ஏதும் இல்லையே.எனவே, வரவிருக்கும் பொதுத் தேர்தலில், ஓட்டுச் சீட்டு முறையைத் தான் பயன்படுத்த வேண்டும். ஆளும் கட்சிகளின் மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுவூட்ட, இதுவே நல்ல மாற்றமாக அமையும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE