சென்னை: தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளை (டிச.,1) உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மக்களிடையே எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து 'உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்' ஆகும்.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசால் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்றின் சதவீதம் 2010-11ம் ஆண்டு 0.38 சதவீதத்திலிருந்து 2019ம் ஆண்டு 0.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய எச்.ஐ.வி தொற்றினைக் கண்டறிய 3,161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழகத்தில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE