சென்னை : அரசியல் தொடர்பாக ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அவரது ரசிகர்கள் உட்பட பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அவர் விரைவில் அறிவிக்கிறேன் என கூறிவிட்டார். அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியுடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக டுவிட்டரில் அவர் டிரெண்ட் ஆனார்.
அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த், பல சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாடுகளை மாற்றினார். சில வாரங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும், நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில், அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினி, 'அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள, சில தகவல்கள் உண்மையானவை' என, ஒப்புக் கொண்டார். இதனால், ரஜினி கட்சி துவக்குவாரா; மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

இந்நிலையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் 50 பேர் உடன் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை சொன்னார்கள், நானும் எனது கருத்துக்களை சொன்னேன். எந்த முடிவு எடுத்தாலும் என்னுடன் இருப்பதாக சொன்னார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என் முடிவை விரைவில் அறிவிப்பேன்'' என்றார்.
இன்றைக்கு ரஜினி முக்கிய முடிவை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வழக்கம் போல், 'வரும் ஆனா வராது' என்கிற ஸ்டைலில் பதிலளித்து போய்விட்டார். இந்த கூட்டத்தில் பெரும்பாலும் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே பெரிதும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் அவர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள்'' என்றார். அதேப்போன்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகி ஒருவரும் அதே கருத்தை கூறினார். மேலும் அவர் பேசும்போது தலைவரின் உடல்நிலை முக்கியம் என்கிற ரீதியிலும் பேசினார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் அரசியலுக்கு வருவது சந்தேகமே என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ரஜினி இன்னும் கட்சியே துவங்கவில்லை. அதன்பின் அவர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, அதுவும் இந்த கொரோனா காலத்தில் அவர் களப்பணியில் ஈடுபடுவது எல்லாம் அவரது உடல்நிலைக்கு செட் ஆகாது என்கின்றனர்.
மற்றொருபுறம் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என நம்பிக்கையையும் வைத்து சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. இதனால் டுவிட்டரில் இரண்டாவது நாளாக ரஜினி டிரெண்ட் ஆனார். அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றி பலரும் #Rajinikanth, #Thalaivar, #Annaatthe போன்ற ஹேஷ்டாக்குகளில் கருத்துக்களை பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE