தி.மு.க.,வில் 'சீட்' குமுறல் ஆரம்பம்!
''அரசு விடுதியில அறையை, 'பிளாக்' பண்ணி வச்சிருக்காங்க...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''மதுரை அழகர்கோவில் ரோட்டுல, அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை இருக்கு... பொதுப் பணித் துறை பராமரிப்புல இருக்கிற இங்க, மத்திய, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மதுரை வந்தா, தங்குவாங்க...
''அதே மாதிரி, மதுரை வழியா வெளியூர் போற அதிகாரிகளும், குறைந்த கட்டணம்கிறதால, இங்க தங்கிட்டு போவாங்க... இதுக்கு, மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கணுமுங்க...
''இந்த விருந்தினர் மாளிகை கூடுதல் கட்டடத்துல, மாவட்ட பெண் அதிகாரி ஒருத்தர், விருந்தினர் பெயர்ல, தொடர்ந்து அறையை, 'புக்' பண்ணி வச்சிருக்காங்க...
இப்படி, பல வாரங்களா ஓர் அறையை, 'பிளாக்' பண்ணிடுறதால, முதல்வர், நீதிபதிகள் கூட வர்ற பாதுகாப்பு போலீசார், கார் டிரைவர்கள் தங்க அறை கிடைக்காம தவிக்கிறாங்க...''
என்றார், அந்தோணிசாமி.நாளிதழை மடித்தபடியே, ''பிரியங்காவுக்கு மக்களிடம் இருக்கிற செல்வாக்கு, ராகுலுக்கு இல்லல்லா...'' என்றபடியே,
''சினிமாவுல மட்டுமில்ல, அரசியல்லயும் நல்லாவே நடிக்காருன்னு பேசிக்கிடுதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''நம்ம ஊருல தான், 'மேக்கப்' போட்ட பலர், அரசியல்ல இருக்காங்களே... நீங்க யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஸ்டாலின் மகன் உதயநிதியை தான் சொல்லுதேன்... பிரசார கூட்டங்களுக்கு போய், கைதாகி, காமெடி பண்ணிட்டு இருக்காருல்லா... இவர் பேசுற இடங்கள்ல எல்லாம், அவரது தாத்தாவும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி பத்தி, பெருசா பேசுறதே இல்ல வே...
''இது, கருணாநிதி காலத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை குடுத்திருக்கு...
''அதுவும் இல்லாம, தி.மு.க., ஹிந்து விரோத கட்சியில்லைன்னு காட்டிக்கிறதுக்காக, தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி வாங்கி, விபூதி பூசிக்கிட்டதை பார்த்து, 'தம்பி, சினிமாவுல நல்லா நடிக்குதோ இல்லையோ, அரசியல்ல நல்லாவே நடிக்குது'ன்னு அவரது கட்சியினரே கிண்டலடிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தி.மு.க., குமுறல் சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சட்டசபை தேர்தல்ல, தர்மபுரி மாவட்டம், அரூர் தனி தொகுதியில, தி.மு.க., சார்புல, 'சீட்' வாங்க, பலத்த போட்டி நடக்கறது... இதுல, ஆர்.டி.ஓ.,வா இருக்கற அன்பழகன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சென்னகிருஷ்ணன், தொழிலதிபர் முத்து, பல் டாக்டர் சுரேஷ்னு பலர் முன்னிலையில இருக்கா...
''இவாள்ல யாராவது ஒருத்தருக்கு தான் சீட் கிடைக்கும்னு சொல்றா ஓய்... இதுல பலர் வெளியூர்காரா வேற... ''ஆனா, கட்சிக்காக அடி, உதை வாங்கி, ஜெயிலுக்கு
போயிட்டு வந்த பலர், உள்ளூர்லயே இருக்கறச்சே, இந்த மாதிரி, கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவாளுக்கு சீட் தர, மாவட்ட பொறுப்பாளர்களும் சிபாரிசு பண்றா... இதனால, கட்சிக்காராள்லாம் புகைச்சல்ல இருக்கா ஓய்...''
என்றார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE