கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, வரும், 4ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடு முழுதும் கொரோனா தொற்று அபாயத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தலைநகர் டில்லியில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்துவது, முக்கிய மார்க்கெட்டுகளை மூடுவது உட்பட, சில நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தடுப்பூசி
இதற்கிடையில், தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன என்பது தொடர்பாக, சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர்., உயர் அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சகம், தொடர் ஆலோசனையில் உள்ளது.தடுப்பூசி தயாரானதும், அதை முன்னுரிமை அளித்து, யார் யாருக்கு வழங்குவது மற்றும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அதை சேர்ப்பதற்கான வழிமுறைகள் என, அனைத்து முன்னேற்பாடுகள் குறித்த திட்டங்களும் தயாராகி வருகின்றன.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, பிரதமர் அலுவலகமும், அனைத்து நிலவரங்களையும் கூர்ந்து கவனிப்பதோடு, மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திரமோடி, அவ்வப்போது ஆலோசனைகளும், நடத்தி வருகிறார். சமீபத்தில், தடுப்பூசி தயாரிக்கும் மையங்களுக்கு, நேரடியாக சென்று, பார்வையிட்டார். இந்நிலையில்தான், இன்னும் ஓரிரு மாதங்களில் தடுப்பூசி தயாராகிவிடுமென்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் உலாவரத் துவங்கியுள்ளன.
இரண்டாவது கூட்டம்
மத்திய அரசு வட்டாரங்களிலும், ஒருவிதமான தயார் நடவடிக்கைகளுக்குரிய அறிகுறிகள், கடந்த சில நாட்களாக தெரிகின்றன.இதையெல்லாம் வலுப்படுத்தும் விதமாக, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான ஏற்பாட்டை, மத்திய அரசு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பார்லிமென்ட் தலைவர்களுடன், ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி, திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்ற போதிலும், வரும், 4ம் தேதி, இந்த ஆலோசனைக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ளது. ஏற்கனவே, கொரோனா பரவல் துவங்கிய காலத்தில், இதுபோல அனைத்துக் கட்சி கூட்டம் நடந்த நிலையில், இது இரண்டாவது கூட்டம். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில், அனைத்து கட்சிகளின் பார்லிமென்ட் தலைவர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' கண்டுபிடிப்பை தந்த ஆண்டு'
பத்திரிகை ஒன்றின் ஆண்டு புத்தகத்தில், 2020ம் ஆண்டு குறித்த கட்டுரை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார்; அதில் அவர் குறிப்பிட்டுஉள்ளதாவது:கொரோனா பெருந்தொற்று காலத்தில், நம் நாட்டு மக்கள், பொறுமையுடனும், ஒழுக்கத்துடனும், சட்டத்தை மதித்து, கட்டுப்பாட்டுடன் நடந்தது, உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டை, புற இடையூறு அளித்த ஆண்டு என சிலர் அழைக்கின்றனர். ஆனால், அது, நம் நாட்டுக்கும் நம் சமூகத்துக்கும், அக கண்டுபிடிப்பை ஏற்படுத்திய ஆண்டு என, நான் உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.
'விவசாயிகளை ஏமாற்றாதீர்'
உத்தர பிரதேசத்தின், வாரணாசியில் இருந்து, அலகாபாத் வரையில், 73 கி.மீ., துாரத்திற்கான, ஆறு வழி விரைவு நெடுஞ்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.அப்போது, பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று புதிய வேளாண் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக, விவசாயிகளை சிலர் துாண்டிவிடுகின்றனர்.பல ஆண்டுகளாக, குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, உர மானியம் போன்ற பெயர்களில் விவசாயிகளை ஏமாற்றி வந்தவர்கள் தான், தற்போது அவர்களை தவறாக வழிநடத்தும் பணியையும் செய்கின்றனர்; இதை, நம்பி விவசாயிகள் ஏமாற கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
தடுப்பூசி குழுவினருடன்பிரதமர் உரையாடல்
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, மூன்று நிறுவனங்களை சேர்ந்த குழுவினருடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார். தெலுங்கானாவின், ஐதராபாத்தைச் சேர்ந்த, 'பயோலாஜிக்கல் இ லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ் லாபரட்டரிஸ்' மற்றும் மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள, 'ஜெனோவா பயோபார்மசடிகல்ஸ்' ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:கொரோனா தடுப்பு மருந்தின் பலன்கள் மற்றும் இதர சந்தேகங்களை, மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், எளிதான மொழியில் விளக்கும் பணியில், நிபுணர்கள் குழு, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மருந்து தயாரிப்பு குழுவினர் சந்திக்கும் பிரச்னைகளை உடனுக்குடன் களைய, சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.அப்போது தான், ஒட்டு மொத்த உலகத்தின் காத்திருப்புக்கு உடனடி பலன் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு தடுப்பூசி
அடுத்த ஆண்டு, முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த ஆண்டு, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களுக்குள், நாட்டில் உள்ள, 25 முதல், 30 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஹர்ஷ் வர்தன்மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பா.ஜ.,
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE