டில்லி அருகே விவசாயிகள் போராட்டம் தீவிரம்| Dinamalar

டில்லி அருகே விவசாயிகள் போராட்டம் தீவிரம்

Updated : டிச 02, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (10)
Share
புதுடில்லி ; வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. டில்லி எல்லையில் முகாமிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர். 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும்
டில்லி,விவசாயிகள், போராட்டம், தீவிரம்

புதுடில்லி ; வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. டில்லி எல்லையில் முகாமிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர்.

'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை அறிவித்தனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


எதிர்ப்பு



இதையடுத்து, டில்லி - ஹரியானா எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் தொடர்ந்து, ஐந்தாவது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு நிர்ணயித்துள்ள புராரி மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, டில்லி எல்லையில் போராட்டம் தொடரும்' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் மற்றும் டில்லி எல்லையில் காஜிபுரில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு குவிந்து வருகின்றனர். இதைஅடுத்து, அங்கு, சிமென்ட் சாலை தடுப்புகள் போடப்பட்டுள்ளன.


கோரிக்கை



போராட்டம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:பேச்சு நடத்துவதற்கு நிபந்தனை விதிப்பதை ஏற்க முடியாது. நாங்கள் இறுதியாகவும், உறுதியாகவும் முடிவெடுத்தே, இந்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம். தேவைப்பட்டால், ஆறு மாதங்கள் கூட இங்கு போராட்டத்தை தொடரவும் தயாராக உள்ளோம்.எங்கள் கோரிக்கைகளை ஏற்று, உரிய முறையில் பேச்சு நடத்தாவிட்டால், டில்லி வரும் அனைத்து சாலைகளையும் முடக்கி போராட்டம்
நடத்துவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வைரஸ் பரவும் அபாயம்?



விவசாயிகள் போராட்டம் குறித்து, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது:டில்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், டில்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர், முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.

இதனால், வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் அதிகமாகவே உள்ளது. வைரசை பரப்பும் நிகழ்வாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. தற்போது கடும் குளிரும் நிலவுகிறது. அதனால், உடல்நலம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. அவ்வாறு பாதிப்பு ஏற்படுவோருக்கு, வைரஸ் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'வைரஸ் தீவிரம் குறித்து எங்களுக்கு தெரியும். அதைவிட மிகவும் ஆபத்தானதாக, இந்த வேளாண் சட்டங்கள் உள்ளன' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X