அசாம் சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டிருந்த, காங்கிரஸ் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 68 ஆண்டுகளில், பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே, அசாமில் ஆட்சியில் இருந்தது. இந்நிலையில், 2016ல் நடந்த அசாம் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 126 தொகுதிகளில், 26 இடங்களில் மட்டுமே, காங்., வெற்றி பெற்றது.இதன் காரணமாக, சட்ட சபையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை, காங்., இழந்தது. இந்த படுதோல்வி காரணமாக, பல தலைவர்கள் கட்சியை விட்டு விலகினர்.
இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தலில், காங்., தலைமையிலான மெகா கூட்டணியில், பா.ஜ., எதிர்ப்பு மனநிலையுள்ள கட்சிகளை சேர்த்து வெற்றி பெற, அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் திட்டமிட்டார்.அசாமில், முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தருண் கோகோய் திட்டமிட்டார்.
மவுலானா பக்ருதீன் தலைமையிலான, ஏ.ஐ.யூ.டி.எப்., எனப்படும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை, மெகா கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.மக்கள் கட்சி, அசாம் கனமன்சா, அசாம் ஜாட்டியா பரிஷத் போன்ற பா.ஜ., எதிர்ப்பு மனநிலை உடைய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் கோகோய் ஈடுபட்டு இருந்தார்.எதிர்பாராத நேரத்தில், தருண் கோகோய் சமீபத்தில் மரணமடைந்தது, இந்த கூட்டணி முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இதனால், மற்ற மாநிலங்களை போலவே, அசாமிலும், மிகப் பெரிய அரசியல் நெருக்கடி நிலையை, காங்., சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE