சென்னை : அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களையும், முழுவதுமாக கணினி வாயிலாக இணைக்கும் பணி, விரைவாக துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ், 4,449 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அவை, ரேஷன் கடைகளை நடத்துவதுடன், விவசாயிகளுக்கு பயிர் கடன், தங்க நகை அடமான கடன் போன்றவற்றை வழங்கி வருகின்றன. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான நிதியை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்குகிறது. தொடக்க கூட்டுறவு சங்கங்களில், கணினி வாயிலாக பணி நடந்தலும், சங்கங்கள் அனைத்தும் முழுவதுமாக கணினி வாயிலாக இணைக்கப்படவில்லை. இதனால், சங்கங்களின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்க முடியவில்லை. இதையடுத்து, அனைத்து சங்கங்களையும் முழுவதுமாக, கணினி வாயிலாக இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்திற்கான செலவில், 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளது. இருப்பினும், கணினி மயமாக்கும் பணிகளை துரிதகதியில் செயல்படுத்த, அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து, கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறுகையில், 'கணினி மென்பொருள் வாயிலாக சங்கங்களை இணைப்பதால், ஒவ்வொரு சங்க செயல்பாட்டையும், உயரதிகாரிகள், எங்கிருந்தபடியும் கண்காணிக்க முடியும். இதனால், நிதி விவகாரங்களில் முறைகேடு செய்ய முடியாது. 'எனவே, முழுவதுமாக கணினிமயமாக்கும் பணியை, விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE