விருதுநகர் ஒவ்வொரு ஆண்டும் டிச., 1 ல் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படு கிறது. இந்தாண்டு 'உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பு, பேரிடர் காலங்களில் பகிர்ந்து கொள்ளுதல்' என்ற மையக்கருத்தில் கொண்டாடப்படுகிறது.
இக்கருத்து கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் உலகளவில் பொறுப்பை உணர்ந்து ஒற்றுமையுடன் எய்ட்ஸ் நோயாளிகளை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை அளிப்பதே சிறந்த மனிதநேய அணுகு முறை. இந்தியாவிலே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் தான் எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரியாக உள்ளது. தமிழகத்தில் எச்.ஐ.வி., உள்ளவர்களை கண்டறிந்து சிறந்த சிகிச்சை வழங்கிட 2,163 நம்பிக்கை மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு சிகிச்சை மையங்கள் மற்றும் கட்டணமில்லா சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 64 இடங்களில் நம்பிக்கை மையங்கள் உள்ளன.
இங்கு சென்று எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ளலாம். எச்.ஐ.வி., பாதிப்பு உறுதி யானால் விருதுநகரில் உள்ள கூட்டு மருத்துவ சிகிச்சை மையம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பிற பகுதி மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 8 இடங்களில் இணைப்பு கூட்டு சிகிச்சை மையங்கள் செயல்படுகிறது. மாவட்டத்தில் எச்.ஐ.வி., தொற்று இல்லாத நிலையை உருவாக்க மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்துடன் சுகாதார அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து பல்வேறு செயல்திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் எய்ட்ஸ் தினத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் சமபந்தி போஜனம் செய்யப்படுவது வழக்கம். இதில் மக்கள், கலெக்டர், சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் பங்கேற்பர். இது அவர்களுக்கு உத்வேகத்தையும், மனித நேய ஒருமைப்பாட்டையும் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் 2010ல் 0.79 சதவீதமாக இருந்த எச்.ஐ.வி., பாதிப்பு 2019ல் 0.20 சதவீதமாக குறைந்துள்ளது. இன்னும் பலருக்கு எய்ட்ஸ் நோயை பற்றிய விழிப்புணர்வு போதவில்லை.
எச்.ஐ.வி., பாதித்தவர்களை தொட்டாலே நோய் பரவும் என தவறாக கருதுகின்றனர். இதனாலேயே எச்.ஐ.வி., பாதித்தவர்கள் சமுகத்தில் இருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டதாக கருதுகின்றனர். எய்ட்ஸ் நோயால் சாதாரண குடும்பத்து பெண்கள், முதியோர்கள், விவசாயிகள் என எல்லோருமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோயின் வேதனை அறிந்தவர்கள் என்றுமே எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்குவதில்லை. நம்மில் ஒருவர் தான் என்பதை உணர்ந்து ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும்.
தொலைநோக்கோடு அணுகுவோம்
எச்.ஐ.வி., நோயாளிகள் எங்களது தோழர்கள். நாங்கள் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடைய உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களை தவிர விழிப்புணர்வு பொதுமக்களுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. தேவையில்லாத பயம் அகல வேண்டும். எச்.ஐ.வி., நோயாளிகளுடன் நட்புறவு கொண்டு பழக வேண்டும். எச்.ஐ.வி., பாதிப்பை அறிவதற்கு நம் மாவட்டத்தில் பல்வேறு நம்பிக்கை மையங்கள் உள்ளன. இளைஞர்கள் இன்றே நம்பிக்கை கொண்டு அங்கு சென்று எச்.ஐ.வி., பரிசோதனை செய்யலாம். எச்.ஐ.வி., பாஸிட்டிவ் வந்தால் பயப்படாமல் சிகிச்சை தொடரலாம். சிகிச்சைக்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும். எதிர்காலத்தை தொலைநோக்கு பார்வையோடு அணுகினால் எச்.ஐ.வி பாதிப்பு வரும் காலங்களில் யாருக்கும் இருக்காது.பழனிச்சாமி, துணை இயக்குனர் சுகாதாரத்துறை, விருதுநகர்
மாவட்டத்தில் பாதிப்பு விபரம்
ஆண்டு சதவீதம்
2014--15 0.31
2015--16 0.32
2016--17 0.23
2017--18 0.20
2018--19 0.20
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE