சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களின் சீட்டு: பா.ஜ., வைக்கப்போகுது வேட்டு| Dinamalar

'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களின் சீட்டு: பா.ஜ., வைக்கப்போகுது வேட்டு

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | |
கோவை, ஆர்.எஸ்.புரம் சென்றிருந்த சித்ரா, மித்ரா, தியாகி குமரன் வீதிக்கு அருகில் உள்ள சுந்தரம் வீதி வழியாக, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.''அரசாங்க அலுவலகத்துல லஞ்ச தொகையை குறைச்சிட்டாங்களாமே,'' என, பேச்சை துவங்கினாள் சித்ரா.''அதுவா, வழக்கமா, 'அம்மா' ஸ்கூட்டர் வாங்கணும்னா, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்குவாங்க; 2,000 ரூபாயா குறைச்சிட்டாங்களாம்; அதே மாதிரி, அனைவருக்கும்
 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களின் சீட்டு: பா.ஜ., வைக்கப்போகுது வேட்டு

கோவை, ஆர்.எஸ்.புரம் சென்றிருந்த சித்ரா, மித்ரா, தியாகி குமரன் வீதிக்கு அருகில் உள்ள சுந்தரம் வீதி வழியாக, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.

''அரசாங்க அலுவலகத்துல லஞ்ச தொகையை குறைச்சிட்டாங்களாமே,'' என, பேச்சை துவங்கினாள் சித்ரா.

''அதுவா, வழக்கமா, 'அம்மா' ஸ்கூட்டர் வாங்கணும்னா, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்குவாங்க; 2,000 ரூபாயா குறைச்சிட்டாங்களாம்; அதே மாதிரி, அனைவருக்கும் வீடு திட்டத்துல, ரூ.2.10 லட்சம் அரசு மானியம் வழங்குது; இதுல, 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமா அழுகணும். இப்ப, பாதிக்கு பாதியா குறைச்சு, 5,000 ரூபாய் கொடுத்தா போதும்னு சொல்றாங்களாம். தாலிக்குத்தங்கம் வாங்குறதுக்கு, 5,000 ரூபாய் வாங்குறாங்களாம்,''

''ஏன், என்னாச்சு, எதுக்காக, லஞ்சம் வாங்குறதுல சலுகை காட்டுறாங்க. எதுவும் புரியலையே,'''

'தேர்தல் வரப்போறதுனால, அரசு திட்டங்களை எதிர்பார்த்து வர்ற மக்களை அலைக்கழிக்கக் கூடாது; சட்டு புட்டுன்னு வேலையை செஞ்சு கொடுத்து, அரசுக்கு நல்ல பெயர் ஏற்படுத்திக் கொடுக்கணும்னு, ஆளுங்கட்சி தரப்புல இருந்து, அரசு துறை உயரதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்காங்க. அதனால, லஞ்சம் வாங்குறதை குறைச்சிருக்காங்களாம்,''

''அடப்பாவிகளா, லஞ்சம் வாங்குறது குற்றம்கிறதை, உணரவே மாட்டாங்களா; லஞ்சம் வாங்குறதை கைவிட்டுட்டு, மக்களுக்கு எப்போதுதான் சேவை செய்வாங்களோ,'' என்ற சித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும். போலீஸ்காரங்க ஒழுங்கா ரோந்து போகாததால, உயிர் பலி ஏற்பட்டதாமே,'' என்றாள்.

''ஆமாக்கா, உண்மைதான்! மொபைல் போனுக்காக வாலிபரை கொலை செய்த கும்பல், அதே ரோட்டுல, சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி, கார்ல போனவரை வழி மறிச்சிருக்கு; உஷாரான அவர், வேற ரூட்டுல காரை திருப்பியதோடு, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தகவல் சொல்லியிருக்காரு,''

''அப்புறம், என்னாச்சு,'' என, படபடத்தாள் சித்ரா.''அக்கா, பொறுமையா இருங்க; சொல்றேன்! கட்டுப்பாட்டு அறையில் இருந்து, சிங்காநல்லுார் ஸ்டேஷன் லிமிட் பீட் எண்: 16க்கு தகவல் சொல்லியிருக்காங்க. ஆனா, ரோந்து போலீசார், 'ஸ்பாட்'டுக்கு போகலை; கட்டுப்பாட்டு அறை போலீசாரும், 'பாலோ-அப்' செய்யலை. இடைப்பட்ட நேரத்துல, கொலை நடந்திருச்சு,''

''விஷயம் கேள்விப்பட்ட துணை கமிஷனர் ஸ்டாலின், ஸ்பாட்டுக்கு போயிட்டாரு. இதுசம்மந்தமா, கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் விசாரிச்ச பிறகே, கொலை நடந்த விஷயமே ரோந்து போலீசாருக்கு தெரிஞ்சிருக்கு,''

''டூட்டியில் அஜாக்கிரதையா இருந்ததால், ரோந்து போலீசாரையும், கட்டுப்பாட்டு அறை அலுவலர்களையும், மைக்கிலேயே துணை கமிஷனர், 'லெப்ட் - ரைட்' வாங்கிட்டாரு. இதுல, எஸ்.எஸ்.ஐ.,-யை ஆயுதப்படைக்கு மாத்திட்டாங்களாம்,''

''போலீஸ்காரங்க ரோந்து பணியை ஒழுங்கா செஞ்சிருந்தா, ஒரு உயிர் போயிருக்காதே,'' என, ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''நீங்க சொல்றதும் சரிதான்! வேலை செய்யணுமே! அதே சிங்காநல்லுார் லிமிட்டுல இன்னொரு பிரச்னையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. கொடுக்கல் - வாங்கல் பிரச்னை சம்பந்தமா, ஒரு பெண் வீட்டுக்கு கும்பல் வந்திருக்கு. 'என்னிடம் பணமில்லை; பக்கத்து வீட்டுக்காரம்மா நிறையா வச்சிருக்கு'ன்னு, அந்தப் பெண் சொல்லியிருக்கார்,''

''பணம் வசூலிக்க வந்த கும்பல், பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து, பணம், 'டிவி'யை துாக்கிட்டு போயிருக்காங்க. சத்தம் கேட்டு, அருகாமையிலுள்ள வீடுகளில் வசிப்போர், போலீசுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. அந்த வீட்டில், விபசாரம் நடப்பது தெரிய வந்திருக்கு. அதிர்ச்சியடைந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லியிருக்காங்க,''

''ஸ்டேஷன் லிமிட்டுல வேலை பார்க்குற உளவுத்துறை போலீசாரை, உயரதிகாரிகள் வெளுத்து வாங்கியிருக்காங்க,'' என்றபடி, டி.பி., ரோடு வழியாக, ஸ்கூட்டரை ஓட்டினாள் மித்ரா.''மாடல் ரோடு போடுறதா, நாலு வருஷமா சொல்றாங்க; இழுத்துக்கிட்டே இருக்காங்க; இன்னும் எத்தனை வருஷமாகுமோ,'' என, நொந்து கொண்ட சித்ரா, ''எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை தோற்கடிச்சாகனும்னு, தி.மு.க., தரப்புல, 'டார்கெட்' பிக்ஸ் பண்ணியிருக்காங்களாமே,'' என, கிளறினாள்.

''ஆமாக்கா, உள்ளூர் அமைச்சரை தோற்கடிச்சாகனும்னு, தி.மு.க.,வினருக்கு மேலிடத்துல இருந்து, உத்தரவு போட்டிருக்காங்க. தொகுதி மாறி போட்டியிட்டாலும், ஜெயிச்சுக் காட்டணும்னு கண்டிசனா சொல்லியிருக்காங்களாம். அதனால, அ.தி.மு.க.,வுல இருக்குற அதிருப்தியாளர்களை மடக்கவும், 'ஸ்லீப்பர் செல்'களா மாத்துற வேலையையும், ரகசியமா செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்,''

''அது, சரி! ஆளுங்கட்சியை சேர்ந்த மாஜி மேயர்கள், ஆட்சி அதிகாரத்துல மறுபடியும் ஒரு ரவுண்ட் வந்திரக்கூடாதுன்னு சிலர் நினைக்கிறாங்களாமே,''

''அதுவா, ஒருத்தருக்கு இ.பி.எஸ்., ஆதரவு; இன்னொருத்தருக்கு ஓ.பி.எஸ்., ஆதரவு இருக்கு. 'சீட்' வாங்கி, ஜெயிச்சிட்டா, இப்ப அதிகார மையமா இருக்கறவங்களுக்கு சிக்கல் வந்திரும்னு நினைக்கிறாங்க. அதனால, 'சீட்' கொடுக்காம, ஓரம் கட்டுறதுக்கான, ஏற்பாடுகளை செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்,''

''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''வரப்போற தேர்தல்ல, 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களுக்கும் திரும்ப வாய்ப்பு கெடைக்காதுன்னு சொல்றாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''நீங்க சொல்றது, கரெக்ட்டுதான்! நானும் அதையே கேள்விப்பட்டேன். கிணத்துக்கடவு தொகுதியில், ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யின் உறவினரை நிறுத்தப் போறதா, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. ஆனா, பா.ஜ., தரப்பிலும் தொகுதியை கேட்குறாங்களாம். அதேமாதிரி, கோவை தெற்கு தொகுதியையும் பா.ஜ., குறி வச்சிருக்காம். அதனால, 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் பலரும் மறுபடியும் 'சீட்' கெடைக்குமான்னு ஏக்கத்துல இருக்காங்களாம். சிங்காநல்லுார் தொகுதியை கைப்பத்துறதுக்கு, நிர்வாகிகளுக்குள் ஏகப்பட்ட போட்டியிருக்குதாம்,''

''கூட்டணியும், தொகுதி பங்கீடும் பைனலான பிறகே யார் யாருக்கு 'சீட்'டுன்னு உறுதியாகும்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றபடி, ராமச்சந்திரா ரோடு வழியாக ஸ்கூட்டரை ஓட்டினாள் மித்ரா.

தொண்டாமுத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தை பார்த்த சித்ரா, ''மதுக்கரை குரும்பபாளையத்துல நடந்த விழாவுல, அமைச்சர் வேலுமணியே, ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டாராமே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''ஆமாக்கா, தடுப்பணை கட்டும் பணியை துவக்கி வைக்கிறதுக்கு வந்திருந்தாரு; பேச ஆரம்பிச்சபோது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருத்தரு, 'வருங்கால முதல்வரே வாழ்க'ன்னு கோஷம் போட்டாரு. விழாவுல இருந்தவங்க அமைதியாகிட்டாங்க,''

''உஷாரான அமைச்சர், 'யாருப்பா, அது; இப்படியெல்லாம் கோஷம் போடக்கூடாது. நம்ம ஊருக்கு நிறைய திட்டங்களை கொடுத்தவரு இ.பி.எஸ்., எளிமையான முதல்வர்; அவருதான் நிரந்தர முதல்வர்'ன்னு சொல்லி, சமாளிச்சாரு,''


''அடடே, அப்புறம் என்ன நடந்துச்சு,'' என, விடாப்பிடியா சித்ரா கேட்க, ''இந்த விழாவுக்காக, ரோட்டின் இருபுறமும் கட்சிக்காரங்க, பல லட்சம் ரூபாய் செலவு செஞ்சு ஏகப்பட்ட பிளக்ஸ் பேனர் வச்சிருந்தாங்க; போலீஸ்காரங்க கண்டுக்கலை'' என்றாள் மித்ரா.


பூ மார்க்கெட்டை கடந்து, தேவாங்கபேட்டை ஸ்கூல் வழியாக, புரூக்பாண்ட் ரோடு சிக்னலில் காத்திருந்தபோது, அரசாங்க ஜீப் கடந்து சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துறதுக்காக, அரசு சார்பில், இலவசமா கறவை மாடு வாங்கிக் கொடுக்குறாங்க. ஆனா, கொஞ்ச நாளிலேயே இறந்து போயிடுது; இதைப்பத்தி, மாவட்ட அரசு அதிகாரிகள் கண்டுக்கறதில்லை. தட்ப வெப்ப நிலை காரணமா, இறப்பு ஏற்படுதுன்னு சொல்லி, காப்பீடு பணம் வாங்கிக் கொடுத்து, சரிக்கட்டிடுறாங்க,''


''இந்த விஷயத்துல, துறை ரீதியா விசாரணை நடத்தியும் கூட, ஒருத்தர் மீது கூட, கலெக்டர் நடவடிக்கை எடுக்கலை. பொள்ளாச்சி, திருப்பூர்ல வாரந்தவறாம மாட்டுச்சந்தை கூடுது; அங்க வாங்காம, கிருஷ்ணகிரிக்கு போயி, கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுதுன்னு பயனாளிகள் கேட்குறாங்க. பயனாளி ஒருத்தரு, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பிட்டு, நீதி கிடைக்குமான்னு போராடிக்கிட்டு இருக்காரு,'' என்ற மித்ரா, கிரீன் சிக்னல் விழுந்ததும், அவிநாசி ரோடு மேம்பாலத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X