கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது. டிச., 31க்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.பொருளாதார கணக்கெடுப்பில், ஒவ்வொரு குடும்பத்தினரின் பொருளாதார வசதி, நிறுவனங்களின் நிதியாதாரம் உள்ளிட்ட தகவல் சேகரிக்கப்படுகிறது.இந்த புள்ளி விவரங்கள், வளர்ச்சி திட்டங்கள் உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. கள ஆய்வாளர்கள், வீடு வீடாகச் சென்று புள்ளிவிவரங்களை சேகரித்து, மின்னணு முறையில், 'ஸ்மார்ட் போன்' மூலம் பதிவேற்றம் செய்கின்றனர்.இதற்கு, மத்திய புள்ளியியல் அமைச்சகம், பொது சேவை மைய மின்னணு நிர்வாக சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கோவை மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில், 95 சதவீதம், பேரூராட்சிகளில், 75 சதவீதம், நகராட்சிகளில், 70 சதவீதம் முடிந்துள்ளது.மாநகராட்சி பகுதியில், 30-35 சதவீதமே நிறைவடைந்துள்ளது; டிச., 31க்குள், 100 வார்டுகளிலும் கணக்கெடுத்து, பதிவேற்றம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், கள ஆய்வாளர் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொருளாதார கணக்கெடுப்பாளர்கள் கூறியதாவது:வீடு வீடாகச் சென்று, குடும்ப உறுப்பினர்கள் விவரம், சுய தொழில் செய்பவரா, தனியார் நிறுவன ஊழியரா, குடும்பத்தலைவி, கைத்தொழில் செய்கிறாரா, தொழிலுக்கான முதலீட்டுக்கு வங்கியில் கடன் வாங்கியிருக்கிறாரா அல்லது, சுய முதலீட்டில் தொழில் நடத்துகிறாரா என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரித்து, மின்னணு முறையில், பதிவேற்றம் செய்யப்படும்.கடந்தாண்டு, டிச., 31ல் முடித்திருக்க வேண்டும்; மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் அவகாசம் வழங்கி, வரும் டிச., 31க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.கோவையில் புள்ளிவிவரங்கள் சேகரிக்க, கள ஆய்வாளர்கள் தேவை. விரும்புவோர், 93842 66712, 97888 16346, 90802 38559, 73732 96974 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE