திருப்பூர்:பாரத் அவென்யூ பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென, முதலிபாளையம் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், தொலைபேசி மூலம் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், மக்களின் தொலைபேசி வாயிலான கோரிக்கையை கேட்டு பதிவு செய்தனர்.மக்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். நேற்று மட்டும், 97000 41114 மற்றும் 0421 2969999 என்ற எண்கள் வாயிலாக, 97 பேர் கோரிக்கையை தெரிவித்தனர். முதலிபாளையம், பாரத் அவென்யூ பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'பாரத் அவென்யூ பகுதியில், ரோடு, சாக்கடை வசதி, குடிநீர் என, எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம்; குடிநீர் வாங்க, மாதாமாதம் செலவழிக்க வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர். முத்தணம்பாளையத்தை சேர்ந்த பிரியா என்ற பெண், தனது மகளுடன் வந்து, கணவர் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். மனுவில், 'கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், ராஜா என்ற முகமது அலியுடன் திருமணம் நடந்தது.ஆதரவற்றவர் என்று கூறி, என்னுடன் வாழ்ந்தார்; பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவுலத்நிஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE