ஐதராபாத் : தெலுங்கானாவில், 'ஆன்லைன்' முதலீட்டு நிறுவனம் துவங்கி, 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
'ஆன்லைன்' : இம்மாநிலத்தில், ஜூலையில், 'ஆன்லைன்' முதலீட்டு நிறுவனத்தை சிலர் துவங்கியுள்ளனர். இதற்காக இணையதளம் உருவாக்கிய அவர்கள், நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்களை பதிவிட்டனர். பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை கவர்வதற்காக, 'இது பிரிட்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பன்னாட்டு நிறுவனம்' என, அறிவித்தனர்.
தெலுங்கானாவில் அலுவலகம் இல்லாத இந்நிறுவனம், 10 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை ஐந்து வகை முதலீட்டு திட்டங்களை அறிவித்தது. இதில், பல கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, முதற்கட்டமாக முதலீடு செய்தவர்களுக்கு, கமிஷன் தொகை வழங்கப்பட்ட தகவல் வேகமாக பரவியது. இதனால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த, 2,500க்கும் மேலானோர், இந்நிறுவனத்தில் இரு மாதங்களில் 7 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்தனர்.
அதிர்ச்சி : அந்நிறுவனத்தை நடத்தியவர்கள் ஏழு கோடி ரூபாய்க்கும் மேல் முதலீட்டு தொகையை மோசடி செய்ததுடன், இணையதளம், மொபைல் எண்களை முடக்கினர். இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாகபட்டினத்தில் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE