திசைகள் நான்கு, வேதங்கள் நான்கு, வருணங்கள் நான்கு, போர் முறைகள் நான்கு, திருடர்கள் கால், அரை, முக்கால் மற்றும் முழு என்று நான்கு என, எப்படி முன்னோர் பிரித்து வைத்திருக்கின்றனரோ, அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர் சோ, நான்காகப் பிரித்து வைத்திருந்தார், நேர்மைவாதி, கொஞ்சம் நேர்மைவாதி, ஊழல்வாதி, அதிக ஊழல்வாதி என்று!
இன்னும் ஐந்து மாதங்களில், நம் மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடக்கப் போகிறது.மாறி மாறி ஆட்சிஎந்தத் தேர்தலிலும், ஆட்சியாளர்கள் யாரும், யானையால் மாலை போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நாம் தான், நம் இடது கை ஆட்காட்டி விரலில் வாக்களித்த தற்கான அடையாள முத்திரையை பதித்துக் கொண்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சின்னங்களில், நமக்கு பிடித்த சின்னத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்தி, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கப் போகிறோம். கடந்த, 60 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இரண்டும், இதற்கு மேலும் நாட்டைக் கெடுக்க முடியாது என்ற அளவுக்கு, கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்துள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால், 'நாம் தான் இப்படி நாட்டை கெடுத்து குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறோம்' என்றும், 'நம்மால் தான் நாடு நாசமாய் போய் கொண்டிருக்கிறது' என்றும் கிஞ்சிற்றும் சிந்திக்காமல், கவலைப்படாமல், மேலும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கவும், ஆர்வத்தோடு காத்திருக்கின்றன.எப்படி திசைகள் முதல் அரசியல்வாதிகள் வரை, நான்கு நான்காக பிரித்து வைத்திருக்கிறோமோ, அது போல, வாக்காளர்களாகிய நம்மிடமும், நான்கு பிரிவினர்கள் உண்டு.கண்களை மூடிக் கொண்டு, ஆளும் கட்சிக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ வாக்களிப்பவர்கள் முதல் மற்றும் இரண்டாம் வகை.
வாக்குச் சாவடிக்கே செல்லாமல் தவிர்ப்பவர்கள், மூன்றாம் வகை. நடுநிலை வாக்காளர்கள் என்பவர்கள், நான்காம் வகை.ஒரு அரசியல் கட்சியை, ஆட்சி பீடத்தில் அமர்த்துவதும், ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு அரசியல் கட்சியை வீட்டுக்கு வழி அனுப்பி வைப்பதுமான கைங்கர்யத்தை, செவ்வனே செய்து முடிப்பவர்கள் இந்த நடுநிலை வாக்காளர்களாகிய, நான்காம் வகையினர் தான்!முதல் மற்றும் இரண்டாம் வகையினரின் குணாதிசயம் எப்படிப்பட்டதென்றால், பகுத்தறிவு பகுத்தறிவு என்று பக்கம் பக்கமாக பேசுவர்; எழுதுவர்; விமர்சிப்பர். கோடீஸ்வர குடும்பம்ஆனால், திராவிட முன்னேற்றக் கழகமும், கருணாநிதி ஆட்சியும் ஊழல் நிறைந்தது என, சொல்வதை ஏற்காமல், 'திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போன்றொரு நேர்மையான, நாணயமான, நாட்டுப்பற்று கொண்ட, தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சி, உலகிலேயே கிடையாது' என 'பகுத்தறிந்து ஆராய்ந்து' கூறுவர்.
தவிர, 'கருணாநிதி குடும்பம் கோடீஸ்வர குடும்பம். திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியே, 20, 30 தலைமுறைகளுக்கான செல்வத்தை சேர்த்து வைத்திருப்பவர், ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டுமென்ற அவசியமே கழகத்திற்கோ, கருணாநிதிக்கோ கிடையவே கிடையாது' என்று சத்தியம் செய்வர். இவர்கள் தப்பித் தவறிக் கூட, தி.மு.க.,வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.அதே போல அந்த இரண்டாம் வகையினர், அ.தி.மு.க., விசுவாசிகள். 'ஜெயலலிதா ஊழல் புரிந்தார் என்று உச்ச நீதிமன்றமே சான்றளித்து தண்டனை வழங்கி இருக்கிறதே! அ.தி.மு.க., என்றாலே டெண்டரும், ஊழலும் தானே...' என்றால், 'எல்லாம் சசிகலாவும், சசிகலா குடும்பத்தினரும் ஜெயலலிதாவுக்கே தெரியாமல் செய்தது.
உச்ச நீதிமன்றம் சொன்னால் நம்பி விடுவோமா? அந்த ஆண்டவனே நேரில் வந்து சொன்னாலும் நம்ப மாட்டோம்' என்று உறுதியாக நிற்பர். இவர்களின் வாக்குகள் அனைத்தும், அ.தி.மு.க.,வுக்குப் போகுமே தவிர, அதிலிருந்து ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்கு போகாது.'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே! நான் தாண்டா என் மனசுக்கு ராஜா!' என்று வீட்டிலேயே கவிழ்ந்து படுத்து, வாக்குப்பதிவு நாளன்று அளிக்கப்பட்ட விடுமுறையில், தொலைக்காட்சி சேனல்களில் மூழ்கி முத்துக் குளித்துக் கொண்டிருப் பவர்கள், மூன்றாவது வகையினர்.உலகிலேயே திருந்தாத, திருத்த முடியாத ஜென்மங்கள் எது என்றால், இந்த மூன்றாம் வகையினர் தான்.
வாக்களிக்க வாக்குச்சாவடிக்குத்தான் செல்ல மாட்டார்களே தவிர, ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சியை, -அது தி.மு.க.,வோ அல்லது அ.தி.மு.க.,வோ, - அதை சகட்டுமேனிக்குக் கிழிகிழி என்று கிழித்துத் தொங்க விடுவதில் முன்னணியில் நிற்பவர்கள்! எந்த அரசியல் கட்சி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியில் அமர வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள், மீதியுள்ள இந்த நான்காவது வகையினர் தான்.விசுவாசிகள்இந்த நான்காவது வகையினருக்கு, இன்னொரு பெயர் இருக்கிறது; அதுதான் நடுநிலை வாக்காளர்கள். இவர்கள் எப்போதும் அரசியல் கட்சிகளின் தொண்டர்களையும், விசுவாசிகளையும் போல, ஒரே கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப, தங்களையும், தங்கள் முடிவுகளையும் மாற்றிக் கொண்டு, வாக்களிப்பர்.
இந்த நடுநிலை வாக்காளர்களான நான்காம் வகையினர் அளிக்கும் வாக்குகள் தான், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியில் அமரப் போகும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும்.ஐயா, நடுநிலையாளர்களே! உங்கள் சிந்தனைக்கு சில உதாரணங்களை சமர்ப்பிக்கிறோம். சிந்தித்துப் பார்த்து பிறகு செயல்படுங்கள். 'சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் தானே... அவரு பெயரை எல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல் துறையா! பாத்துரலாம் கொஞ்ச நாள்ல...' - - திருப்பூர் கூட்டத்தில், தி.மு.க., உதயநிதி.நிருபர்:- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தும், அரசு கட்டணம் கூட செலுத்த முடியாத நலிந்த மாணவர்கள் உதவி கேட்டு தி.மு.க,வை அணுகலாமா?தி.மு.க., துரைமுருகன்:- வருஷத்துக்கு, 40 ஆயிரம் ரூபாய் கட்ட முடியாதவன்லாம் எதுக்கு டாக்டருக்கு படிக்கணும்?அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆளப் போகும் அரசியல் கட்சியை தேர்ந்தெடுக்கவிருக்கும் நடுநிலை வாக்காளப் பெருமக்களே! வாக்குச் சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சின்னத்திற்கு அருகில் உள்ள பொத்தானை அழுத்தும் முன், மேலே குறிப்பிட்டுள்ளவற்றை நினைவில் கொள்க.கூடவே, நில அபகரிப்பு, வியாபார கேந்திரங்களில் மாமூல் வசூலித்தல், ஓட்டல்களில் உண்ட உணவுகளுக்கு பணம் கொடுக்காமல், 'எஸ்கேப்' ஆதல், மின் வெட்டு, பாலியல் பலாத்காரங்கள், மிரட்டல்கள், கந்து வட்டிக் கொடுமைகள், அடாவடிகள், அராஜகங்கள் அனைத்தையும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வந்து, பின் பொத்தானை அழுத்துங்கள்.பின் குறிப்பு: குறிப்பிட்டுள்ள வாசகங்கள் எதுவும் நம் கற்பனையில் தோன்றியதல்ல. சம்பந்தப்பட்டவர்கள், பொது கூட்ட மேடைகளில் பேசியதே! பழைய பேச்சுக்களையும், சம்பவங்களையும் கிளறினால், பெரும் நாற்றம் எடுக்கும் என்பதாலும், கண்ணியம் கருதியும், இங்கே தவிர்க்கப்படுகின்றன.- ஈ.வேலாயுதம், திருச்சி.