பெண்கள் உடலின் சில பகுதிகளில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கும் வழிகள் குறித்து, அழகுக்கலை நிபுணர் வசுந்தரா: கறுப்பு அழகு தான். எனினும், உடலின் சில இடங்களில் மட்டும் கருமை படர்ந்திருப்பது, பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
உதாரணமாக, நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு, வறண்ட தன்மையால் கருமை ஏற்படலாம் அல்லது காற்றோட்டம் இல்லாததாலும் ஏற்படலாம். மேலும் சரும சுருக்கம், சருமம் மடங்கும் பகுதிகளில் கருமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்தப் பிரச்னையை, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மட்டுமே தீர்க்கலாம். கண்களை சுற்றி சிலருக்கு கருவளையம் ஏற்படும். அதை போக்க, அவித்த உருளைக் கிழங்கை பாதியாக வெட்டி, கண்கள் அருகில் கருமை இருக்கும் பகுதியில் வைக்கலாம். வெள் ளரிக்காயை வெட்டி வைக்கலாம். பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் பால் சேர்த்து, அந்த கலவையை, கண்களை சுற்றி மசாஜ் செய்வதன் மூலம் கருமை நீங்க வாய்ப்பு உள்ளது.
சில பெண்களுக்கு அக்குள் பகுதி கருமையாக இருக்கும். அதை தவிர்க்க, தினமும் இருமுறை குளிக்க வேண்டும். குளிக்கும் தண்ணீரில் பன்னீர் சேர்த்து தேய்த்து குளிக்கலாம். படிகாரத்தை கட்டியாக வாங்கி, தண்ணீரில் நனைத்து, கருமையான பகுதிகளில் சிறிது நேரம் தேய்த்த பின் குளிக்கலாம்.மூக்கின் இருபுறங்களிலும் சில பெண்களுக்கு கருமை இருக்கும். விட்டமின் இ கேப்ஸ்யூல் வாங்கி, அதை, 'கட்' செய்து, இரவு துாங்க செல்லும் போது, அந்த எண்ணெய்யை, மூக்கின் இரு புறங்களிலும் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.மூக்கின் அருகில் வெதுவெதுப்பாக ஆவி பிடித்து, சூடானதும், அந்த பகுதியை, நன்கு துடைத்து எடுப்பதன் மூலம் கருமை நீங்க வாய்ப்பு உள்ளது.
மார்பகத்தின் கீழ்புறங்களில், சில பெண்களுக்கு கருமை இருக்கும். மிகவும் இருக்கமான பிரா அணிவதால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதனால், தளர்வான பிராக்களை அணிவது தான் சிறந்தது. ஆயுர்வேத மருந்தகங்களில், ஏலாதி கேர தைலம் கிடைக்கும். அதை லேசாக சுட வைத்த, ஆறிய பின், கருமையான பகுதிகளில் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.சிலருக்கு நெற்றியில் கருமை இருக்கும். அதை போக்க, விட்டமின் சி மாத்திரையை தண்ணீரில் கரைத்து, பஞ்சில் அதை நனைத்து, நெற்றி யில் தடவி, கொஞ்ச நேரம் கழித்து நன்கு கழுவி வர, நல்ல பலன் கிடைக்கும்.
முக்கியமாக, வெயிலில் அடிக்கடி, அதிகம் செல்லாமல் இருந்தாலே உடலில் கருமை ஏற்படுவதை தவிர்க்கலாம். அவசியமாக வெளியே சென்று தான் ஆக வேண்டும் என்றால், சன் ஸ்கிரீன் லோஷன் தடவி செல்வது நல்லது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE