பொள்ளாச்சி:கொப்பரை விலை அதிகரிப்பதால், சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கொப்பரை மூட்டைகள் விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகின்றன.பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் நெகமம் பகுதி தென்னை விவசாயிகள், கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.தேங்காய் உற்பத்தி சீசன் முடிந்து, தட்டுபப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேங்காய்க்கு விலை கிடைக்க துவங்கியுள்ளது. இருப்பினும், கொப்பரை விலை உயராமல், உற்பத்தி மையங்கள் முடங்கின. ஒரு சில இடங்களில் மட்டும் கொப்பரை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, இருப்பு வைக்கப்படுகிறது.தற்போது, தேங்காய் விலையும், கொப்பரை விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி தேங்காய் பச்சை டன் - 43,000, தேங்காய் கருப்பு டன் - 46,500 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்டது. கொப்பரை விலையும் கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனையானது.விலை இல்லாதபோது, பொருளீட்டு கடன் பெற வேளாண் வணிக கிடங்குகளில், விவசாயிகள் கொப்பரையை இருப்பு வைத்தனர். கடந்த சில நாட்களாக, கொப்பரை விலை அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வியாபாரிகளும், கிடங்குகளில் இருந்து கொப்பரையை எடுத்துச் சென்று, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், செஞ்சேரி கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த, 16 ஆயிரம் மூட்டைகளில், 50 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என, அலுவலர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை, வடக்கிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு வேளாண் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட, கொப்பரையும் வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE