உடுமலை:மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும், 'கலா உற்சவ்' போட்டிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தயாராக இருப்பதற்கு, கல்வித்துறையால் உடுமலை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும், பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற்றும் காண்கலை உள்ளிட்ட நான்கு தலைப்புகளில், போட்டிகள் நடத்தப்படுகிறது.மாணவர்கள் எந்தவிதமான பாகுபாடில்லாமல், தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே, இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்பது குறித்து, அரசு அறிவுரை வழங்கியுள்ளது.இதில், உள்ளூர் தொன்மையான பொம்மைகள், விளையாட்டுகள் மற்றும் முதன்மையான நான்கு தலைப்புகளிலும், செவ்வியல் மற்றும் பாரம்பரிய நாட்டுபுற வகை என்ற பிரிவுகளில் ஒன்பது தலைப்புகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். மாநில அளவிலான போட்டிகளைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். தேசிய அளவிலான போட்டிகள், 'ஆன்லைன்' வழியாக நிகழ்கால நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படுகிறது.ஒரு மாணவர் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிக்கான விதிமுறைகள், கூடுதல் விபரங்கள், தேதிகள், அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வழியாக, இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனால், உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போட்டி அறிவித்த பின்னர், விபரங்களை அனுப்பவும், ஆர்வமுள்ள மாணவர்களை பங்கேற்க செய்யவும் தயாராக இருக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE