உடுமலை:உடுமலை ரயில்வே சுரங்கப்பாலத்தில் தேங்கியுள்ள மழை நீர், கழிவு நீரால், நகரின் பிரதான குடியிருப்புகளின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.உடுமலை நகரை இரண்டாக பிரிக்கும் வகையில் ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. தெற்கு பகுதியிலுள்ள, பழனியாண்டவர் நகர், ஆறுமுகம் நகர், ஜீவா நகர், காந்திபுரம், கண்ணமநாயக்கனுார், ராமசாமி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்கள் ரயில்வே வழித்தடத்தை கடக்க, பெரியார் காலனி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டப்பட்டது. முறையான வடிவமைப்பு, திட்டமிடல் இல்லாததால், பாலம் மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, சுரங்கப்பாலத்தில் பல அடி உயரத்திற்கு மழை நீருடன், கழிவு நீரும் தேங்கியுள்ளது.இதனால், ரயில்வே வழித்தடத்தை கடக்க இப்பகுதி மக்கள், கொழுமம் ரோடு, தளி ரோடு ரயில்வே மேம்பாலம் என, மூன்று கி.மீ., துாரம் சுற்றிச்செல்கின்றனர்.இங்கு மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இவ்வாறு வரும் நீரை, வடிகால் மூலம் கொண்டு சென்று, சேகரிப்பு கிணற்றில் சேகரித்து, மோட்டார் மூலம் பம்பிங் செய்ய வேண்டும்.ஆனால், நிலமட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக பாலம் கட்டிய நிலையில், கழிவு நீர் சேகரிப்பு கிணறு அமைக்கவில்லை.அதோடு, மோட்டார் மூலம் கழிவு நீர் வெளியேற்ற அமைத்திருந்த மோட்டாரும் திருடு போனது. அதற்கு பிறகு, நகராட்சி சார்பில், தற்காலிகமாக குழாய் மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டது.அதையும் இயக்க பணியாளர்கள் நியமிக்காததால், மோட்டார் இருந்தும், பல நாட்களாக கழிவு நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது.எனவே, ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை முழுமையாக அகற்றவும், நிரந்தர கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE