தியாகதுருகம்: கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொது இடங்களுக்கு வருவதால் தொற்று மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணியவும், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.இவைகளை கட்டாயம் பின்பற்ற அதிகாரிகள் மூலம் கண்காணித்து மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதன் காரணமாக படிப்படியாக தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பாதிப்படைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களாக ஒற்றை இலக்கத்தில் கட்டுக்குள் வந்தது.தமிழகம் முழுதும் தொற்று குறைந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதனை சாதகமாக்கிக் கொண்ட மக்கள் பொது இடங்களுக்கு வரும்போது, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டத் துவங்கியுள்ளனர்.தீபாவளி பண்டிகை தருணத்தில் பொருட்களை வாங்க நகர் புறங்களில் உள்ள கடைகளுக்கு மக்கள் அதிகளவில் கூடினர். அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் முகக் கவசம் அணிந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.நகரங்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே முகக் கவசம் அணிந்து வருகின்றனர். கிராமங்களில் அதைக்கூட காண முடியவில்லை. அதேபோன்று சமூக இடைவெளி என்பதும் காணாமல் போய் விட்டது.பஸ், ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதனை அதிகாரிகள் யாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை.இதனால் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தோற்று கடந்த இரு தினங்களாக இரட்டை இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் நோய் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸ் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
நோய்க்கிருமி முற்றிலும் கட்டுப்படுத்தும் வரையில் அல்லது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலாவது பொது இடங்களுக்கு வருபவர்கள் முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றபடுவது அவசியமாகும்.இதனை எவ்வித பாரபட்சமும் இன்றி மக்கள் முறையாகப் பின்பற்ற உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE